குத்தாலம் உக்தவேதீஸ்வரர் கோவில் குடமுழுக்கு 62 ஆண்டுகளுக்கு பிறகு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலத்தில் தருமபுரம் ஆதீனத்துக்கு சொந்தமான பரிமள சுகந்த நாயகி உடனாகிய உக்தவேதீஸ்வரர் கோவில் உள்ளது. தேவாரப்பாடல் பெற்ற இக்கோவிலில் சாமி மணவாள நாதர் திருக்கோலத்துடன் அருள்பாலிக்கிறார்.
பார்வதி தேவியை மணம் முடிக்க சிவபெருமான் கைலாயத்தில் இருந்து வந்தபோது அவருக்கு துணையாக வந்த உத்தால மரமும், சிவபெருமானின் பாதரட்ஷையும் இன்றும் இந்த கோவிலில் உள்ளது.
இக்கோவிலில் கடந்த 1960-ம் ஆண்டு குடமுழுக்கு நடந்தது. 62 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் குடமுழுக்கு நடத்த திட்டமிடப்பட்டு திருப்பணிகள் நடந்தன. திருப்பணிகள் நிறைவடைந்ததை தொடர்ந்து கடந்த 4-ந் தேதி யாகசாலை பூஜைகள் தொடங்கின.
நேற்று 8-வது கால யாக சாலை பூஜைகள் முடிவடைந்ததும், யாகசாலையில் இருந்து புனிதநீர் அடங்கிய கடங்கள் புறப்பாடாகி கோவிலை வலம் வந்தன. அதைத்தொடர்ந்து விமான கலசத்தில் புனிதநீர் ஊற்றப்பட்டு குடமுழுக்கு நடந்தது.
விழாவில் தருமபுரம் ஆதீனம் மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள், திருவாவடுதுறை ஆதீனம் அம்பலவாண தேசிக பரமாச்சாரிய சுவாமிகள், செங்கோல் ஆதீனம் சிவப்பிரகாச தேசிக சத்தியஞான பரமாச்சாரிய சுவாமிகள், தொண்டை மண்டல ஆதீனம் திருச்சிற்றம்பல தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
திருக்கடையூர் மகேஷ் குருக்கள் புனித நீர் ஊற்றி குடமுழுக்கை நடத்தி வைத்தார். விழாவில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
விழாவையொட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு வசந்தராஜ், குத்தாலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வள்ளி மற்றும் 500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.