மயிலாடுதுறையில் கோவில் காவலாளியை கொலை செய்து விட்டு உண்டியலை உடைத்து திருட முயன்றவர் ஒரு ஆண்டுக்குப்பிறகு போலீசாரிடம் பிடிபட்டார்.
மயிலாடுதுறை நகரில் காவிரி ஆற்றங்கரையோரம் படித்துறை விஸ்வநாதர் கோவில் உள்ளது. இந்துசமய அறநிலையத்துறைக்கு உட்பட்ட இந்த கோவிலில் கடந்த ஆண்டு (2021) மே மாதம் 9-ந் தேதி செங்கமேட்டு தெருவை சேர்ந்த சாமிநாதன் (வயது60) என்பவர் இரவு காவலாளியாக பணியில் இருந்தார்.
அப்போது அவரை மர்ம நபர் ஒருவர் தாக்கிவிட்டு உண்டியலை உடைத்து கொள்ளையடிக்க முயன்றார். உண்டியலில் பணம் இல்லாததால் அந்த நபர் அங்கிருந்து தப்பிச்சென்றுவிட்டார்.
தாக்குதலில் படுகாயம் அடைந்த சாமிநாதன் திருவாரூர் மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி கடந்த ஆண்டு மே 14-ந் தேதி சாமிநாதன் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து மயிலாடுதுறை போலீசார் கொலை மற்றும் கொள்ளை முயற்சி வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். மேலும் கண்காணிப்பு கேமரா பதிவுகளை வைத்து ஆய்வு செய்தனர். ஆனாலும் கடந்த ஒரு ஆண்டாக வழக்கில் தொடர்புடைய நபரை போலீசாரால் நெருங்க முடியவில்லை.
இந்த நிலையில் சப்-இன்ஸ்பெக்டர் அறிவழகன் தலைமையிலான தனிப்படை போலீசார் தொடர்ந்து மேற்கொண்ட விசாரணையில், சாமிநாதனை கொலை செய்துவிட்டு, உண்டியலை உடைத்து கொள்ளை அடிக்க முயற்சி செய்தவர், தஞ்சை மாவட்டம் பூதலூர் அருகே உள்ள மருதங்குடி கிராமம் வடக்குத்தெருவை சேர்ந்த கொத்தனார் கோவிந்தராஜ் (42) என்பது தெரியவந்தது. இதனையடுத்து நேற்று கோவிந்தராஜை போலீசார் கைது செய்தனர்.
அவரிடம் மேற்கொண்ட விசாரணையில் தெரியவந்த விவரங்கள் குறித்து போலீசார் கூறியதாவது:-
கொத்தனாராக வேலை செய்து வந்த கோவிந்தராஜ் மீது திருவாரூர் மாவட்டம் வடுவூர் போலீஸ் நிலையத்தில் கோவில் உண்டியலை உடைத்து திருடிய வழக்கு ஒன்று உள்ளது. இவர் கடந்த ஆண்டு சரக்கு ஆட்டோ வாங்குவதற்காக நண்பர்களுடன் மயிலாடுதுறைக்கு வந்துள்ளார்.
அப்போது காவிரி கரையோரம் பாதுகாப்பு இல்லாமல் இருந்த இந்த கோவிலை நோட்டமிட்ட கோவிந்தராஜ், உண்டியலை உடைத்து கொள்ளையடிக்க முயற்சித்தார்.
அப்போது சத்தம் கேட்டு ஓடிவந்த இரவு காவலாளி சாமிநாதனை தாக்கி, பாறாங்கல்லை எடுத்து சாமிநாதனின் தலையில் அடித்துள்ளார். அதன்பிறகு கோவிலில் இருந்த உண்டியலை உடைத்து பார்த்த போது பணம் இல்லாததால் ஏமாற்றத்துடன் கோவிந்தராஜ் அங்கிருந்து தப்பிச்சென்று விட்டார். இவ்வாறு போலீசார் கூறினர்.
கோவிலில் கொலை மற்றும் கொள்ளை முயற்சி நடந்து ஓராண்டு நெருங்கும் இந்த நேரத்தில் கைது செய்யப்பட்ட கோவிந்தராஜை நேற்று கோர்ட்டில் ஆஜர்படுத்திய மயிலாடுதுறை போலீசார் அவரை சிறையில் அடைத்தனர்.