சென்னை, நெசப்பாக்கம், பாரதி நகர் பகுதியை சேர்ந்தவர் உஷா. இவர் விருகம்பாக்கம் வேம்புலி அம்மன் கோவில் தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வீட்டு வேலை பார்த்து வருகிறார்.
உஷா நேற்று தனது அண்ணன் மகன் ஹரிகரனுடன் (வயது 4) வேலைக்கு புறப்பட்டு சென்றார். பின்னர் அங்கு அவர் வீட்டு வேலை பார்க்கும் பணியில் ஈடுபட்டார்.
அப்போது வீட்டு உரிமையாளரின் 2 குழந்தைகளுடன் சேர்ந்து சிறுவன் ஹரிகரன் விளையாடி கொண்டு இருந்தான். பின்னர் வீட்டை விட்டு வெளியே சென்ற குழந்தைகள் 3 பேரும் அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில் உள்ள நீச்சல் குளம் அருகே சென்று ஓடி பிடித்து விளையாடினர். அப்போது எதிர்பாராத விதமாக சிறுவன் ஹரிகரன் தவறி நீச்சல் குளத்தில் விழுந்தான்.
இதையடுத்து உடன் விளையாடிய குழந்தைகள் 2 பேரும் அழுது கூச்சலிட்டனர். இதைகேட்ட அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து ஹரிகரனை மீட்டு ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே சிறுவன் ஹரிகரன் பரிதாபமாக உயிரிழந்துவிட்டான்.
இதுகுறித்து கே.கே நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நீச்சல் குளத்தில் விழுந்து சிறுவன் உயிரிழந்த சம்பவம் அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.