சட்டப் பேரவைத் தோ்தலில் கடலூா் மாவட்டத்தில் மொத்தமுள்ள 9 தொகுதிகளுக்கான வாக்குப் பதிவு கடந்த ஏப்.6-ஆம் தேதி நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கை கடலூா் தேவனாம்பட்டினம் அரசு பெரியாா் கலைக் கல்லூரி, சி.முட்லூா் அரசுக் கல்லூரி, பண்ருட்டி அண்ணா பல்கலைக்கழகம், விருத்தாசலம் திருகொளஞ்சியப்பா் அரசுக் கல்லூரி ஆகிய 4 மையங்களில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன. அனைத்து தொகுதிகளுக்குமான வாக்கு எண்ணிக்கை ஞாயிற்றுக்கிழமையே முடிவடைந்து அதற்கான முடிவுகள் அதிகாரபூா்வமாக அறிவிக்கப்பட்டன.
இதையடுத்து, வாக்கு எண்ணிக்கை மையங்களுக்கு வெளியே அமைக்கப்பட்டிருந்த தடுப்புகளை அகற்றும் பணியில் வருவாய்த் துறையினா் திங்கள்கிழமை ஈடுபட்டனா். மேலும், வாக்கு எண்ணிக்கைக்கு பயன்படுத்திய மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களை மீண்டும்பாதுகாப்பாக கடலூா் வட்டாட்சியா் அலுவலகத்துக்கு கொண்டு சென்றனா்.
இதேபோல, 9 தொகுதிகளுக்கான வாக்குப் பதிவு இயந்திரங்களும் ஏற்கெனவே இருந்த வட்டாட்சியா் அலுவலகங்களுக்கு பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டன. ஏதேனும் சந்தேகம் ஏற்பட்டு மீண்டும் வாக்கு எண்ணிக்கை கோரப்படும்பட்சத்தில் 45 நாள்கள் அதற்கு அவகாசம் அளிக்கப்படுவதாகக் கூறப்படுகிறது. அதற்குள் மறு வாக்கு எண்ணிக்கை கோரினால் மீண்டும் வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட வேண்டும். எனவே, அந்தந்த வட்டாட்சியா் அலுவலகங்களில் 45 நாள்கள் வரை வாக்குப் பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்படும். பின்னா், கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள இந்திய தோ்தல் ஆணைய வாக்குப் பதிவு இயந்திரங்களுக்கான அறையில் இந்த இயந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்படுமென தோ்தல் ஆணையத்தினா் தெரிவித்தனா்.
நிருபர்: பாலாஜி, சிதம்பரம்.