கடலூர், சிதம்பரம் அருகே கீழ்அனுவம்பட்டு கிள்ளை ரெயிலடியை சேர்ந்தவர் முருகேசன். முன்னாள் ராணுவவீரர். இவருடைய மனைவி அமுதா, மகன் சர்மா ஆகிய 2 பேரும் நேற்று கடலூர் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர்.
பின்னர் அவர்கள் கலெக்டர் அலுவலக நுழைவு வாயிலில் அமர்ந்து திடீரென உண்ணாவிரதம் இருந்தனர்.இதை அறிந்த போலீசார் அவர்களிடம் சென்று விசாரணை நடத்தினர்.
விசாரணையில், அமுதா கிள்ளை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கடந்த 10 ஆண்டுகளாக தூய்மை பணியாளராக தொகுப்பூதியம் அடிப்படையில் பணியாற்றி வருவதும், அவரது மகன் சர்மா அதே ஆரம்ப சுகாதார நிலையத்தில் இரவு நேர காவலாளியாக தொகுப்பூதியத்தில் வேலை பார்த்து வருவதும் தெரிந்தது.
அவர்கள் 2 பேரும் தங்களை பணி நிரந்தரம் செய்ய கோரி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டதும் தெரிய வந்தது.
இதையடுத்து அவர்கள் 2 பேரிடமும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி, உண்ணாவிரதத்தை கைவிட செய்தனர் அதன்பிறகு அவர்கள் கலெக்டரிடம் மனு அளித்து விட்டு சென்றனர். இருப்பினும் இந்த சம்பவத்தால் கலெக்டர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.