திருவாரூர், 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூரில், அரசு ஊழியர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா். இதைத்தொடர்ந்து மறியலில் ஈடுபட்ட 150 பேர் கைது செய்யப்பட்டனர்.
பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். ஓய்வூதியம் இல்லாத பணியாளர்களுக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும். சிறப்பு காலமுறை ஊதியம் பெற்று வரும் நியாய விலைக்கடை பணியாளர்கள், அங்கன்வாடி, சத்துணவு பணியாளர்கள், ஆகியோருக்கு நிரந்தர ஊதிய விகிதம் நிர்ணயம் செய்ய வேண்டும்.
பொது வினியோக திட்டத்துக்கு தனித்துறை உருவாக்க வேண்டும். டாஸ்மாக் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்து காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு பணியாளர் சங்க திருவாரூர், தஞ்சை, நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களை உள்ளிடக்கிய திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு சாலை மறியல் போராட்டம் நடந்தது.
போராட்டத்துக்கு அரசு பணியாளர் சங்க மாநில துணைத்தலைவர் ஆறுமுகம் தலைமை தாங்கினார். மாநில துணைத்தலைவா பாஸ்கரன், மாநில செயலாளர்கள் மகேந்திரன், பிரகாஷ், மாவட்ட துணைத்தலைவர் குணசீலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாநில அமைப்பாளர் நெடுஞ்செழியன், டாஸ்மாக் பணியாளர் சங்க மாவட்ட செயலாளர் கோவிந்தராஜ், மாவட்ட பொருளாளர் கோவிந்தராஜ், அரசு நியாயவிலை கடை பணியாளர் சங்க மாவட்ட செயலளர் ஹரிஹரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
சாலை மறியல் போராட்டத்தால் திருவாரூர்- நாகை சாலையில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து சாலை மறியலில் ஈடுப்பட்ட 50 பெண்கள் உள்பட 150 பேரை போலீசார் கைது செய்தனர்.