கடலூர், மேற்கு மத்திய மற்றும் தென் மேற்கு வங்க கடலில் உருவான அசானி புயல் வலுவடைந்து நேற்று ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினத்திற்கு தென் கிழக்கில் சுமார் 340 கிலோ மீட்டர் தொலைவில் இருந்தது. மேலும் இது மணிக்கு சுமார் 12 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வருகிறது.
இது வடமேற்கு திசையில் நகர்ந்து சற்று வலு குறைந்து, சாதாரண புயலாக ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே இன்று (புதன்கிழமை) அதிகாலை கரையை கடக்க வாய்ப்பு உள்ளது.
இதன் காரணமாக தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதியில் ஒரு சில இடங்களில் லேசான அல்லது மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்தது.
அதன்படி கடலூரில் நேற்று முன்தினம் இரவு லேசான மழை பெய்தது. பின்னர் அதிகாலை நல்ல மழை பெய்தது. காலை 9 மணிக்கு பிறகு விட்டு, விட்டு மழை பெய்ததால் மாணவ-மாணவிகள் நனைந்தபடி பள்ளி, கல்லூரிகளுக்கு சென்றதை பார்க்க முடிந்தது. வேலைக்கு சென்றவர்களும், வாகன ஓட்டிகளும் சிரமப்பட்டனர். 10.30 மணிக்கு பிறகு மழை இல்லை.
இந்த மழையால் தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கி நின்றது. இதேபோல் விருத்தாசலம், சேத்தியாத்தோப்பு, ஸ்ரீமுஷ்ணம், லால்பேட்டை, பரங்கிப்பேட்டை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்தது. இருப் பினும் நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த மழை 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக மே.மாத்தூரில் 26 மில்லி மீட்டர் பதிவானது. குறைந்தபட்சமாக புவனகிரி, காட்டுமன்னார்கோவிலில் தலா 1 மில்லி மீட்டர் மழை பதிவானது. மாவட்டத்தில் சராசரியாக 3.46 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது.
விருத்தாசலம், பகுதியில் நேற்று முன்தினம் நள்ளிரவில் சூறாவளி காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. இதனால் விருத்தாசலம் அடுத்த எருமனூர், தொட்டிக்குப்பம், பட்டி, பரூர்உள்ளிட்ட பகுதிகளில் சாகுபடி செய்யப்பட்டிருந்த நூற்றுக்கணக்கான வாழைமரங்கள் காற்றில் சாய்ந்தன.
வாழைத் தார்கள் சில நாட்களில் முதிர்ச்சி அடைந்து நல்ல லாபம் தரும் நிலையில் இருந்தது. திடீரென காற்றில் வாழை மரங்கள் சாய்ந்ததால் பெருத்த நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.
மாவட்டத்தில் மற்ற இடங்களில் பெய்த மழை அளவு விவரம் மில்லி மீட்டரில் வருமாறு:-
தொழுதூர்- 7, வேப்பூர்- 5, காட்டுமயிலூர், குடிதாங்கி தலா 5, அண்ணாமலைநகர், விருத்தாசலம், குப்பநத்தம் தலா 3.2, கீழசெருவாய், பரங்கிப்பேட்டை, கடலூர், கலெக்டர் அலுவலகம் தலா 3, சேத்தியாத்தோப்பு- 2.8, ஸ்ரீமுஷ்ணம்-2.3, பண்ருட்டி, கொத்தவாச்சேரி, லால்பேட்டை, பெலாந்துறை தலா 2, சிதம்பரம்-1.8.