வேதாரண்யத்தில் கோடை மழையில் பாதிக்கப்பட்ட எள் செடிகள் மீண்டும் பூத்து குலுங்குவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
நாகை மாவட்டம், வேதாரண்யத்தை அடுத்த கருப்பம்புலம், கரியாப்பட்டினம், தென்னம்புலம் ஆதனூர் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் 3 ஆயிரம் ஏக்கரில் எள் சாகுபடி செய்யப்பட்டது.
எள் செடிகள் நன்றாக முளைத்து பூக்கள் வந்த நிலையில் கடந்த மாதம் பருவம் தவறி பெய்த கோடை மழையால் எள் செடிகள் பாதிக்கப்பட்டது. இதனால் செடியில் உள் வளவளப்பான தன்மை இழந்துவிட்டது. இதன் காரணமாக மகசூல் பாதிக்கப்படும் என விவசாயிகள் கவலை அடைந்தனர்.
இந்த நிலையில் கோடை மழையில் பாதிக்கப்பட்ட எள் செடிகளுக்கு விவசாயிகள் பூச்சி மருந்து மற்றும் உரம் தெளித்து வந்தனர். தற்போது வேதாரண்யம் பகுதியில் வெயில் அடிப்பதால் எள் செடிகள் மீண்டும் பூத்து குலுங்குகின்றன.
பருவம் தவறி பெய்த மழையில் பாதிக்கப்பட்ட கோடைக்கால பயிர்களான எள் செடிகள் தற்போது மீண்டும் பூத்து குலுங்குவதை கண்டு மகிழ்ச்சி அடைந்துள்ளனர். எள் அறுவடை செய்யும் வரை மழை பெய்ய கூடாது என விவசாயிகள் தெரிவித்தனர்.