சென்னை, எம்.ஜி.ஆர். சென்டிரல் ரெயில் நிலையத்தில் முதன்மை கோட்ட பாதுகாப்பு கமிஷனர் செந்தில் குமரேசன் அறிவுறுத்தலின் படி, இன்ஸ்பெக்டர் மதுசூதன் ரெட்டி தலைமையிலான ரெயில்வே பாதுகாப்பு படை புலனாய்வு துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது நேற்று அதிகாலை தன்பாத்தில் இருந்து கேரள மாநிலம் ஆலப்புழாவிற்கு செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயிலின் டி-3 பெட்டியில் இருந்த சந்தேகப்படும்படியாக நபர் வைத்திருந்த பையை சோதனையிட்ட போது, அதில் 4½ கிலோ கஞ்சா பொட்டலம் இருப்பது கண்டறியப்பட்டது.
இதையடுத்து அவரிடம் நடத்திய விசாரணையில், அந்த நபர் கேரள மாநிலம், கொல்லத்தை சேர்ந்த ஜிஜின் சன்னி (வயது 24) என்பது தெரியவந்தது. அவரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவை போலீசார், போதை பொருள் தடுப்பு பிரிவிடம் ஒப்படைத்தனர்.
அதே போல், கேரளா மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம், தடியாட்டபரம்பா போலீசாரால் தேடப்பட்டு வரும் குற்றவாளி ஒருவர் நேற்று முன்தினம் மங்களூரில் இருந்து சென்னை வரும் வெஸ்ட் கோஸ்ட் எக்ஸ்பிரஸ் ரெயில் வருவது தொடர்பாக சென்டிரல் ரெயில்வே பாதுகாப்பு படை புலனாய்வு துறைக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து புலனாய்வு துறையினர் மேற்கண்ட ரெயில் பெரம்பூர் ரெயில் நிலையம் வந்த போது சோதனையிட்டனர். அப்போது மேற்கூறிய படி தேடப்பட்டு வந்த அந்த நபரை மடக்கி பிடித்து கைது செய்தனர். பின்னர் தடியாட்டபரம்பா போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.