0 0
Read Time:3 Minute, 18 Second

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி தாலுகாவுக்கு உட்பட்ட காரைமேடு பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன்(வயது 29). கூலித் தொழிலாளி. இவரது மனைவி பிரனீபா(26). நிறைமாத கர்ப்பிணியாக இருந்த இவரை மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரிக்கு கடந்த 9-ந் தேதி மணிகண்டன் அழைத்து வந்தார்.

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவ ஊழியர்கள், பிரனீபாவுக்கு 2 நாட்களுக்குள் சுகப்பிரசவம் ஆகும் என்று கூறி ஆஸ்பத்திரியில் அனுமதித்துள்ளனர்.

இந்த நிலையில் நேற்றுமுன்தினம் மாலை வரை நன்றாக இருந்த பிரனீபாவிற்கு திடீரென தலைவலி ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அப்போது பணியில் இருந்த பெண் டாக்டர் ஒருவர் பிரனீபாவை பரிசோதனை செய்து ரத்த அழுத்தம் அதிகமாக உள்ளதாகவும், குழந்தை திரும்பியுள்ளதால் உடனடியாக ஆபரேசன் செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார்.அதனைத்தொடர்ந்து பிரனீபாவுக்கு ஆபரேசன் செய்யப்பட்டது. அப்போது சிசு இறந்து இருப்பது தெரிய வந்தது.

இதுகுறித்து தகவல் அறிந்த பிரனீபாவின் உறவினர்கள், சிசு இறந்ததற்கு பயிற்சி செவிலியர்களின் அலட்சியமே காரணம் என்றும், டாக்டர்கள் முறையான சிகிச்சை அளிக்காததாலேயே சிசு இறந்ததாகவும் குற்றம் சாட்டி ஆஸ்பத்திரியை முற்றுகையிட்டு ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதனைத்தொடர்ந்து இறந்த சிசுவின் உடலுடன் உறவினர்கள் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் காந்திஜி சாலையில் அமர்ந்து சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர்.

இதுகுறித்து தகவலறிந்த மயிலாடுதுறை உதவி கலெக்டர் பாலாஜி, தலைமை மருத்துவ அலுவலர் டாக்டர் ராஜசேகரன், துணை போலீஸ் சூப்பிரண்டுகள் வசந்தராஜ்(மயிலாடுதுறை), லாமேக்(சீர்காழி) ஆகியோர் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இந்த பேச்சுவார்த்தையின்போது நடந்த சம்பவம் குறித்து மருத்துவ குழுவினர் மூலம் விசாரணை நடத்தப்பட்டு சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று எழுத்து பூர்வமாக உறுதியளித்ததன் பேரில் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சாலை மறியல் போராட்டத்தால் மயிலாடுதுறை-கும்பகோணம் சாலையில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %