தமிழகம் முழுவதும் இயக்கப்படும் போக்குவரத்து மற்றும் போக்குவரத்து அல்லாத வாகனங்களில் அதிக ஒலி எழுப்பும் ஒலிப்பான்கள் பொருத்தப்பட்டு இயக்கப்படுவதாகவும் இதனால் மக்கள் மிகவும் அவதிப்படுவதாகவும் புகார் வந்தது. இதன்பேரில் வாகனங்களை தணிக்கை செய்யுமாறு சென்னை போக்குவரத்து ஆணையர் உத்தரவிட்டார்.
இதைத்தொடர்ந்து, நாகை வட்டார போக்குவரத்து அலுவலர் பழனிசாமி, மோட்டார் வாகன ஆய்வாளர் பிரபு ஆகியோர் கடந்த 2 வாரங்களாக சோதனையில் ஈடுபட்டனர். இதில் நாகை சரகத்தில் போக்குவரத்து மற்றும் போக்குவரத்து அல்லாத வாகனங்களில் குறிப்பாக தனியார் மற்றும் அரசு பஸ்களில் அதிக ஒலி எழுப்பும் காற்று ஒலிப்பான்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
சோதனையில் 20 தனியார் பஸ்கள் மற்றும் அரசு பஸ்களில் காற்று ஒலிப்பான்கள் பறிமுதல் செய்யப்பட்டு தணிக்கை அறிக்கை வழங்கப்பட்டு மேல்நடவடிக்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் அதிக ஒலி எழுப்பும் காற்று ஒலிப்பான்களை அகற்றுவது தொடர்பாக நாகை சரகத்தை சேர்ந்த அனைத்து தனியார் பஸ் உரிமையாளர்களின் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில் தனியார் பஸ் உரிமையாளர்களிடம் மோட்டார் வாகன விதிகள்படி உள்ள காற்று ஒலிப்பான்களை வாகனங்களில் பொருத்த வேண்டும் என அறிவுரை வழங்கப்பட்டது.