சென்னை தாம்பரம், அடுத்த கவுரிவாக்கத்தில் தனியாருக்கு சொந்தமான கைத்தறி துணிகள் கடை உள்ளது. இங்கு பஞ்சாப்பில் இருந்து கைத்தறி துணிகள், கைவினை பொருட்கள், பஞ்சுமெத்தை, படுக்கைகள் உள்பட வீட்டு உபயோக பொருட்கள் கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வந்தது.
நேற்று இரவு 7.45 மணியளவில் 2 மாடிகள் கொண்ட இந்த கடையின் முதல் மாடியில் இருந்து திடீரென புகை வந்தது. உடனடியாக கடை ஊழியர்கள் துணிகளை போட்டு புகையை கட்டுப்படுத்த முயசித்தனர். ஆனால் கண் இமைக்கும் நேரத்தில் புகை வந்த இடத்தில் தீப்பிடித்து எரியத்தொடங்கியது.
இதனால் ஊழியர்கள் அலறியடித்து வெளியே ஓடிவந்தனர். காற்றின் வேகத்தில் தீ மளமளவென 2-வது தளத்துக்கும் பரவி, கொழுந்துவிட்டு எரிந்தது.
இது குறித்து தகவல் அறிந்ததும் தாம்பரம் மற்றும் மேடவாக்கம் தீயணைப்பு நிலையங்களில் இருந்து தீயணைப்பு வாகனங்களில் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் கடையில் எரிந்த தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
ஆனால் பஞ்சு மெத்தைகள், துணிகள் என்பதால் தீயை கட்டுப்படுத்த முடியவில்லை. மேலும் தீ மளமளவென அருகில் உள்ள கடைகளுக்கும் பரவியது. உடனடியாக அதனை தண்ணீர் ஊற்றி அணைத்தனர்.
சுமார் 3 மணி நேர போராட்டத்துக்கு பிறகு கைத்தறி துணிகள் கடையில் எரிந்த தீயை தீயணைப்பு வீரர்கள் முற்றிலும் அணைத்தனர். எனினும் தீ விபத்தில் கடை முற்றிலும் எரிந்து நாசமானது. கடையில் இருந்த பல லட்சம் ரூபாய் மதிப்பிலான கைத்தறி துணிகள், கைவினை பொருட்கள் தீக்கிரையாகின.
மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. எனினும் தீ விபத்துக்கான காரணம் குறித்து சேலையூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.