பெண்ணாடம் அருகே, உள்ள எடையூர் கிராமத்தை சேர்ந்தவர் பெரியசாமி (வயது 75). ஓய்வுபெற்ற பி.எஸ்.என்.எல். ஊழியரான இவர், தற்போது அதே கிராமத்தில் உள்ள நூலகத்தில் நூலகராக பணிபுரிந்து வந்தார்.
இவரது மூத்த மகன் சிவக்குமார். முன்னாள் ஒன்றிய கவுன்சிலரான சிவக்குமார், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார்.
கடந்த ஆண்டு நடந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் அவரது மருமகளான கோமளவள்ளி, எடையூர் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிட்டார். இவரை எதிர்த்து அதே கிராமத்தை சேர்ந்த விஷ்ணு மனைவி மணிமேகலையும் போட்டியிட்டார்.
இதில் மணிமேகலை வெற்றி பெற்று ஊராட்சி மன்ற தலைவராக பதவி வகித்து வருகிறார். இதனால் முன்விரோதம் ஏற்பட்டு மணிமேகலை தரப்பினருக்கும், கோமளவள்ளி தரப்பினருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
இந்த நிலையில் நேற்று மாலை 4 மணி அளவில் பெரியசாமி தனது வீட்டில் தனியாக இருந்தார். அப்போது அங்கு வந்த ஊராட்சி மன்ற தலைவி மணிமேகலை, விஷ்ணு மற்றும் அவரது ஆதரவாளர்கள் 3 பேர், திடீரென உருட்டு கட்டையால் பெரியசாமியை தாக்கினர்.
இதில் அவர் அலறி துடித்தார். இந்த சத்தம் கேட்டு வந்த அவரது இளைய மகன் கோபி, இவரது மனைவி சங்கீதா, கோமளவள்ளி ஆகியோர் அவர்களை தடுக்க முயன்றனர். ஆனால் அவர்களையும் மணிமேகலை தரப்பினர் தாக்கிவிட்டு தப்பி சென்றனர்.
இந்த தாக்குதலில் படுகாயமடைந்த பெரியசாமி, துடிதுடித்து இறந்தார். மேலும் காயமடைந்த கோபி, சங்கீதா ஆகியோரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக விருத்தாசலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதற்கிடையே இதுபற்றி தகவல் அறிந்த பெண்ணாடம் போலீசார் விரைந்து வந்து, அடித்துக் கொலை செய்யப்பட்ட பெரியசாமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்த புகாரின் பேரில் பெண்ணாடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய ஊராட்சி மன்ற தலைவி மணிமேகலை, அவரது கணவர் விஷ்ணு உள்ளிட்ட 5 பேரை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த கொலையால் எடையூரில் பதற்றமான சூழல் நிலவுகிறது.
இதனால் பாதுகாப்புக்காக 50-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். தேர்தல் முன்விரோதம் காரணமாக நூலகர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.