சென்னை, இந்தியாவிலேயே முதல் முறையாக தசைத் திறன் குறைபாடுள்ள குழந்தைகளுக்கு கற்றல் வாய்ப்பை வழங்கும் வகையிலும், அதனை உறுதிப் படுத்தும் நோக்கிலும் அது போன்ற குழந்தைகளுக்கு மருத்துவ உதவிகளுடன் கூடிய சென்னை மாநகராட்சியின் சிறப்பு பள்ளி தொடங்கப்பட்டது.
சென்னை மாநகராட்சிக்குட்பட்ட ஆயிரம் விளக்கு, மாடல் பள்ளி சாலையில் 2009-ம் ஆண்டில் அப்போது துணை முதல்-அமைச்சராக இருந்த மு.க.ஸ்டாலின் இந்த சிறப்பு பள்ளியை திறந்து வைத்தார்.
இந்த நிலையில் இந்த சிறப்பு பள்ளியில் ரூ.50 லட்சம் செலவில் தசைத்திறன் குறைபாடுள்ள குழந்தைகளுக்கு புதுப்பிக்கப்பட்ட சிறப்பு பள்ளிக்கட்டிடம், மாற்றுத்திறனாளி குழந்தைகள் விளையாட ஏதுவாக புதுப்பிக்கப்பட்ட கூடைப்பந்தாட்ட அரங்கத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று நேரில் வந்து திறந்து வைத்தார்.
மேலும் தசைத்திறன் குறைபாடுள்ள குழந்தைகளுக்கு ரூ.6 லட்சம் மதிப்பிலான மருத்துவ உபகரணங்களை வழங்கியதோடு, அந்த குழந்தைகளின் பயன்பாட்டுக்காக பெருநிறுவன சமூக பொறுப்பு நிதியில் இருந்து ரூ.25 லட்சத்துக்கான மின்தூக்கி வசதியுடன் கூடிய சிறப்பு பஸ் சேவையினையும் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
இதுதவிர, சென்னை சிறப்பு பள்ளியில் தசைத்திறன் குறைபாடுள்ளவர்களுக்காக கட்டப்பட்டு இருக்கும் இயன்முறை மருத்துவ ஆலோசனை அறை, வகுப்பறை, பெற்றோர் அறை, உளவியல் மற்றும் ஊட்டச்சத்து ஆலோசனை அறை, மருத்துவ ஆய்வகம், தொழிற்பயிற்சி அறை ஆகியவற்றையும் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அதன் பின்னர், அங்கு இருந்த மாற்றுத்திறனாளி குழந்தைகளுடன் மு.க.ஸ்டாலின் உரையாடினார். அப்போது மாணவர்கள் அவருக்கு பாசமாக ரோஜாப்பூ கொடுத்ததோடு, அவருடன் செல்போனில் ‘செல்பி’ எடுத்தும் மகிழ்ந்தனர்.
இந்த நிகழ்ச்சியில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, தயாநிதி மாறன் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் டாக்டர் எழிலன், வெங்கடாசலம், பெருநகர சென்னை மாநகராட்சி துணை மேயர் மகேஷ்குமார், கமிஷனர் ககன்தீப் சிங் பேடி உள்பட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
பள்ளி மாணவ – மாணவிகளுக்கு உணவு அளிப்பதன் மூலமாக பள்ளிக்கு குழந்தைகளை வரவழைத்து அறிவுப்புரட்சி ஏற்படுத்திய திட்டம் சென்னை மாநகராட்சி சிறப்பு பள்ளியில் 1920-ம் ஆண்டு கொண்டுவரப்பட்டது.
சென்னை மாநகராட்சி சார்பில் நாளொன்றுக்கு ஒரு மாணவருக்கு ஒரு ‘அணா’ செலவில் அப்போது உணவு வழங்கப்பட்டது. இந்த திட்டம் மேலும் 5 பள்ளிகளில் விரிவாக்கம் செய்யப்பட்டது. அதன் பயனாக 1922-23-ம் கல்வியாண்டு 811 என்ற அளவில் இருந்து மாணவர்களின் எண்ணிக்கை, 1924-25-ம் கல்வியாண்டில் 1,617 ஆக அதிகரித்தது.
இந்த புரட்சிகர திட்டத்தை அன்றைய சென்னை மாநகராட்சியின் தலைவரும், நீதிக்கட்சியின் முன்னோடியுமான சர்.பிட்டி.தியாகராயர் சென்னை மாநகராட்சி சிறப்பு பள்ளியில் தொடங்கி வைத்தார். அதனை நினைவுகூறும் வகையில் ‘அன்றே தொடங்கிய சமூக நீதி சிந்தனை’ என்ற தலைப்பில், சர்.பிட்டி.தியாகராயர் உருவம் பொறித்த கல்வெட்டை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பள்ளியில் நேற்று திறந்து வைத்தார்.