கடலூர் மாவட்டம், சிதம்பரத்தில் இருந்து நேற்று மாலை அரசு பஸ் ஒன்று பயணிகளை ஏற்றிக்கொண்டு விருத்தாசலம் நோக்கி சென்று கொண்டிருந்தது. கதிர்வேல் என்பவர் பஸ்சை ஓட்டினார்.
மணிகண்ணன் என்பவர் கண்டக்டராக பணியில் இருந்தார். இந்த பஸ்சில் பயணம் செய்த ஒரு பெண் பயணிக்கும், கண்டக்டருக்கும் இடையே சில்லரை கொடுப்பது தொடர்பாக தகராறு ஏற்பட்டது.
இந்த நிலையில் விருத்தாசலம் பாலக்கரையில் இறங்கிய அந்த பெண், நடந்த சம்பவம் குறித்து தனது ஆதரவாளர்களிடம் செல்போன் மூலம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனிடையே அரசு பஸ் விருத்தாசலம் பஸ் நிலையத்துக்கு சென்றதும், அங்கு பயணிகள் ஏறியும், இறங்கியும் கொண்டிருந்தனர்.
அப்போது அந்த பெண், ஆட்டோவில் தனது ஆதரவாளர்களுடன் வந்து பஸ்சில் ஏறி கண்டக்டர் மணிகண்ணனை திட்டி, தாக்கி அவரை அதே ஆட்டோவில் கடத்திச் சென்றனர். இதைப்பார்த்து பஸ் டிரைவரும், பயணிகளும் பெரும் அதிர்ச்சி அடைந்தனர்.
இதுபற்றி தகவல் அறிந்த அரசு பஸ் டிரைவர்கள் மற்றும் கண்டக்டர்கள் ஒன்று திரண்டு பஸ் நிலையத்தில் இருந்து வெளியே செல்லும் வழியில் ஜங்ஷன் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
இதனிடையே கண்டக்டரை ஆட்டோவில் கடத்தி சென்றவர்கள், மீண்டும் பஸ் நிலையத்துக்கு வந்து அவரை விட்டுவிட்டு சென்றனர். இதையடுத்து மறியல் போராட்டத்தில் டிரைவர் கதிர்வேல், கண்டக்டர் மணிகண்ணன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
அப்போது அவர்கள், கண்டக்டர் மணிகண்ணன் மீது தாக்குதல் நடத்தியவர்களை உடனே கைது செய்ய வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். இதனால் அந்த பகுதியில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதில் ஆத்திரமடைந்த பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட பஸ் டிரைவர்கள் மற்றும் கண்டக்டர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன் ஒருவருக்கொருவர் நெட்டி தள்ளிக் கொண்டனர். இதுகுறித்து அறிந்து வந்த விருத்தாசலம் போலீசார், போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது போலீசாருக்கும், போக்குவரத்து ஊழியர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு தள்ளுமுள்ளு உருவானது.
அப்போது திடீரென பலத்த மழை பெய்ததால் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் உள்பட அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர். இது குறித்த புகாரின் பேரில் மணிகண்ணனை தாக்கியவா்கள் குறித்து விருத்தாசலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனிடையே அரசு பஸ்களை ஊழியர்கள் விருத்தாசலம் அரசுபோக்குவரத்து கழக பணிமனைக்கு கொண்டு சென்று விட்டனர். தொடர்ந்து அவர்கள் மேற்கொண்டு பஸ்களை இயக்காமல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பஸ்கள் இயக்கப்படாததால் பொதுமக்கள் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர். இந்த சம்பவத்தால் விருத்தாசலத்தில் பரபரப்பு ஏற்பட்டது.