திருவெண்காடு, பகுதிக்கு உட்பட்ட குறவளூரில் உக்கிர நரசிம்மர் கோவிலும், மங்கை மடத்தில் வீர நரசிம்மர் கோவிலும், திருநகரியில் யோக நரசிம்மர் மற்றும் இரணிய நரசிம்மர் கோவிலும், திருவாலியில் லட்சுமி நரசிம்மர் கோவில் என 5 கோவில்கள் உள்ளன.
இந்த கோவில்களில் ஒரே நாளில் சென்று வழிபட்டால் பல்வேறு நன்மைகள் கிடைக்கும் என்பது ஐதீகம். இந்த கோவில்களில் நேற்று நரசிம்ம ஜெயந்தி விழா நடந்தது. மங்கை மடத்தில் உள்ள வீர நரசிம்மர் கோவிலில் பல்வேறு பொருட்களால் அபிஷேக ஆராதனைகள் நடந்தன.
இதனையடுத்து சுவாமி வீதிஉலா காட்சி நடந்தது. இதில் கோவில் நிர்வாக அதிகாரி முருகன் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
இதேபோல, குறவளூர் உக்கிர நரசிம்மர் கோவிலில் காலையில் அபிஷேக ஆராதனைகள் நடந்தன. இதனை அடுத்து மகா சுதர்சன யாகம் நடந்தது. திருநகரி கல்யாண ரங்கநாத பெருமாள் கோவிலில் உள்ள யோக நரசிம்மர் மற்றும் இரணிய நரசிம்மருக்கு மாலை சிறப்பு வழிபாடு நடந்தது.
நரசிம்மர்களுக்கு பல்வேறு பொருட்களால் அபிஷேக ஆராதனைகள் நடந்தன. இதில் கோவில் நிர்வாக அதிகாரி குணசேகரன், பக்த ஜனசபை தலைவர் ரகுநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர். திருவாலி லட்சுமி நரசிம்மர் கோவிலிலும் சிறப்பு வழிபாடுகள் நடந்தன.