சென்னை, பல்கலைக்கழகத்தின் 164வது பட்டமளிப்பு விழா பல்கலைக்கழகத்தில் உள்ள கலையரங்கில் நடைபெற்றது. ஆளுநர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் பொன்முடி ஆகியோர் கலந்துகொண்டு மாணவர்களுக்கு பட்டம் வழங்கி வாழ்த்தினர்.
மேடையில் பேசிய முதலமைச்சர், “கையில் பட்டத்துடனும் கண்களில் கனவுகளுடனும் எதிர்காலத்தை எதிர்நோக்கி இருக்கும் மாணவர்களுக்கு எனது வாழ்த்துகள். உலகின் பல்வேறு வளர்ச்சிக்கு காரணமானவர்களை உருவாக்கியது சென்னை பல்கலைக்கழகம்.
தமிழக மக்களால் முதலமைச்சராக்கப்பட்ட நான், அனைத்தும் மாணவர்களையும் முதல்வனாக்க கொண்டுவந்த திட்டம் தான், நான் முதல்வன் திட்டம்” என்று குறிப்பிட்டார்.
ஏழை, எளிய, விளிம்பு நிலை மாணவர்கள் பயிற்சி பெற ஏராளமான திட்டங்களை நமது அரசு தீட்டியுள்ளது. தகுதி வாய்ந்த மாணவர்களுக்கு வேலை இல்லை என எந்த நிறுவனமும் சொல்லக்கூடாது என்று குறிப்பிட்ட முதலமைச்சர், அதற்காகத்தான், தமிழ்நாடு அரசு பல திட்டங்களை தீட்டியுள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.
மேலும், “இது உங்கள் அரசு, மக்களுக்கான அரசு, மாணவர்களுக்கான அரசு என சொல்வதில் பெருமைப்படுகிறேன். பெற்றோர்களே உங்கள் பிள்ளைகளுக்கு நீங்கள் தரும் கல்வி தான் உண்மையான சொத்து. எனது ஆட்சிக் காலம் உயர்கல்வியில் பொற்காலமாக ஆக வேண்டும் என திட்டமிட்டு செயல்பட்டு வருகிறோம்” என்றும் கூறினார்.