நெல்லை அருகே கல் குவாரி விபத்தில் சிக்கிய மூன்று பேர் உயிருடன் மீட்கப்பட்ட நிலையில், 4வது நபர் இறந்த நிலையில் திங்கள்கிழமை இரவு மீட்கப்பட்டுள்ளார்.
நெல்லை மாவட்டம் முன்னீர்பள்ளம் அருகே அடைமதிப்பான் குளம் கிராமத்தில் வெங்கடேஸ்வரா என்ற பெயரில் கல் குவாரி இயங்கி வருகிறது. இங்கு வழக்கம்போல் மே 14ஆம் தேதி கல்களை ஏற்றும் பணிகள் நடைபெற்று வந்தன.
இந்நிலையில் இரவு சுமார் 12 மணி அளவில் திடீரென மிகப்பெரிய பாறை உருண்டு பள்ளத்துக்குள் கல் அள்ளும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தவர்கள் மீது விழுந்தது. இதில் 2 லாரிகள், 3 கிட்டாச்சி உள்ளே மாட்டிக் கொண்டன. லாரி டிரைவர்கள் செல்வகுமார், ராஜேந்திரன், கிட்டாச்சி ஆபரேட்டர்கள் செல்வம், முருகன், விஜய் ஆகியோர் பாறைக்குள் சிக்கி உயிருக்குப் போராடி வந்தனர்.
இதுகுறித்த தகவல் அறிந்து பாளையங்கோட்டை, நாங்குநேரி ஆகிய பகுதிகளில் இருந்து மீட்பு பணிக்காக தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரவணனும் நேரில் சென்று மீட்பு பணிகளை பார்வையிட்டார். ஆனால், இரவு நேரம் என்பதாலும், மழை பெய்து வருவதாலும், 300 அடி பள்ளம் என்பதனாலும் மீட்பு பணி செய்வதில் சிரமம் ஏற்பட்டது.
இருப்பினும் காலை வரை இடைவிடாது மீட்பு பணியில் அதிகாரிகள் ஈடுபட்ட நிலையில், ராமேஸ்வரம் ஐஎன்எஸ் பருந்து கடற்படை தளத்தில் இருந்து லெப்டினன்ட் கமாண்டர் சஞ்சய் தலைமையிலான 4 பேர் கொண்ட மீட்புக்குழுவினர் ஹெலிகாப்டர் மூலம் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். ஆனால் 300 அடி பள்ளம் என்பதால் ஹெலிகாப்டர் மூலம் மீட்க முடியாமல் அவர்கள் திரும்பிச் சென்றனர். தொடர்ந்து தீயணைப்பு படையினர், போலீஸார் மீட்பு பணியில் ஈடுபட்டு முருகன் மற்றும் விஜய் ஆகியோர் உயிருடன் மீட்கப்பட்டனர்.
அதைத்தொடர்ந்து, குவாரியில் சிக்கிய 3வது நபரும் மீட்கப்பட்டார். அவர் மேல் சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், மீட்கப்பட்ட செல்வம் நேற்று முன்தினம் மருத்துவமனையில் இறந்தார்.
ஓட்டுநர் ராஜேந்திரன், முருகன், செல்வகுமார் ஆகியோர் இடிபாடுகளில் சிக்கி இருந்தனர். இவர்களில் திங்கள்கிழமை இரவு 10:45 மணிக்கு ஒரு உடலை மீட்புக் குழுவினர் மீட்டனர். ராஜேந்திரன், செல்வகுமார், முருகன் ஆகிய மூவரில் யார் என அடையாளம் தெரியவில்லை. இன்னும் இருவர் மீட்கப்பட வேண்டி உள்ளது. மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.