மணல்மேடு, திருவெண்காடு பகுதிகளில் வாய்க்கால்கள் தூர்வாரும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மயிலாடுதுறை மாவட்டம், மணல்மேட்டை அடுத்த கிழாய், களத்தூர், புத்தமங்கலம், விருதாங்கநல்லூர், நடுத்திட்டு உள்ளிட்ட கிராமங்களில் உள்ள விவசாயிகள் தங்களது நிலங்களில் பிரதானமாக நெல் பயிரிட்டு வருகின்றனர்.
இதற்காக பாசன வாய்க்கால்கள் மற்றும் வடிகால் வாய்க்கால்கள் உள்ளன.மழைக்காலத்தில் கனமழை பெய்யும்போது வயல்களில் நீர் தேங்கி நெற்பயிர்கள் மூழ்கி நாசமாகி வந்தது.
இதற்கு இப்பகுதியில் உள்ள வடிகால் வாய்க்கால்கள் பல ஆண்டு காலமாக தூர்வாரப்படாததே காரணம் என்றும், ஆகவே, இந்த வாய்க்கால்களை தூர்வார சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.
அந்த கோரிக்கையின் அடிப்படையில், இப்பகுதியின் முக்கிய வடிகால் வாய்க்கால்களான நடுத்திட்டு வடிகால் வாய்க்காலை 4 கிலோ மீட்டர் தூரம் வரையும், கடகம் வடிகால் வாய்க்காலை 4 கிலோ மீட்டர் தூரம் வரையிலும் தமிழக அரசின் நீர்வளத்துறை சார்பாக தூர்வாரப்பட்டு வருகிறது.
இந்த தூர்வாரும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதனால், இப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இதேபோல திருவெண்காடு பகுதியில் 8 வாய்க்கால்கள் 24 கிலோ மீட்டர் தூரத்திற்கு தூர்வாரும் பணிக்காக தமிழக அரசு ரூ.24 லட்சம் ஒதுக்கீடு செய்துள்ளது.அதன்படி தாழை வாய்க்கால், நாராயணபுரம் வடிகால் வாய்க்கால், நாட்டுக்கன்னிமணி ஆறு, நெப்பத்தூர் தெற்கு வாய்க்கால், நாங்கூர் பிரிவு வாய்க்கால் ஆகிய வாய்க்கால்கள் தூர்வாரும் பணி நடைபெற்று வருகின்றன.