கடலூர் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை சப்-இன்ஸ்பெக்டர் கோபிநாத், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் பண்ருட்டி தாசில்தார் சிவகார்த்திகேயன் ஆகியோர் நேற்று மதியம் பண்ருட்டி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் ரோந்து பணி மேற்கொண்டனர்.
அப்போது புலவனூர் கிராமத்தில் உள்ள ஒரு கீற்று கொட்டகையில் ரேஷன் அரிசி மூட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன் பேரில் அவர்கள் புலவனூர் பகுதியில் சோதனை மேற்கொண்டனர். இதில் அங்குள்ள ஒரு கீற்று கொட்டகையில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த மூட்டைகளை சோதனை செய்தனர்.
அப்போது அந்த மூட்டைகளில் ரேஷன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து ரேஷன் அரிசியை பதுக்கி வைத்தவர் யார் என்பது குறித்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் புதுச்சேரி மாநிலம் மடுகரையை சேர்ந்த ராமலிங்கம் மகன் சங்கர் என்கிற சங்கரலிங்கம் என்பவர் பொதுமக்களிடம் ரேஷன் அரிசியை குறைந்த விலைக்கு வாங்கி, அதனை மீன் பண்ணைகளில் விற்பதற்காக பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் 56 மூட்டைகளில் இருந்த 1400 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர். மேலும் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள சங்கரை வலைவீசி தேடி வருகின்றனர்.