நெல்லை அருகே கல்குவாரியில் தொடர்ந்து பாறைகள் சரிவு ஏற்படுவதால், பாறைகளுக்கிடையே சிக்கியுள்ள 2 பேரை மீட்கும் பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
நெல்லை மாவட்டம், அடைமிதிப்பான்குளத்தில் உள்ள கல்குவாரியில் பாறைகள் சரிந்ததால் ஏற்பட்ட விபத்தில், இடிபாடுகளுக்கிடையே 6 பேர் சிக்கிக் கொண்டனர். 2 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மூன்றாவதாக மீட்கப்பட்ட செல்வம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். 300 அடி ஆழத்தில் விபத்து ஏற்பட்டதால் அவ்வப்போது மீட்புப்பணியில் தொய்வு ஏற்பட்டது. இதற்கிடையே, நான்காவது நபர் சடலமாக மீட்கப்பட்டார். மீதமுள்ள 2 பேரையும் மீட்கும் பணி இரவு பகலாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், சம்பவ இடத்தில் மாவட்ட ஆட்சியர் விஷ்ணு ஆய்வு மேற்கொண்டார். பிரத்யேகமாக பேட்டியளித்த அவர், மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக தெரிவித்தார். 5-வது நபர் கண்டறியப்பட்டுள்ள நிலையில், 6-வது நபரையும் விரைவில் மீட்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக ஆட்சியர் விஷ்ணு தெரிவித்தார். இதனிடையே, விபத்து ஏற்பட்ட பகுதியில் மத்திய தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் பார்வையிட்டனர். லாரிக்கு அடியில் சிக்கியிருந்த 5-வது நபர் கண்டறியப்பட்டுள்ள நிலையில்,
மீட்புப் பணியின் போது மீண்டும் பாறைகள் சரிந்து விழுவதால் மீட்பு பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இன்று, மண்ணியல் துறை வல்லுநர்கள் ஆய்வறிக்கை கொடுப்பதை தொடர்ந்து மீட்பு பணிகள் தொடங்கும் என தகவல் வெளியாகியுள்ளது.