சிதம்பரம் அண்ணாமலைநகர் பெரியமாதா கோவில் தெருவை சேர்ந்தவர் வினோத் மனைவி பாக்கியலட்சுமி(வயது 45). இவர், கடந்த ஆண்டு ஜூலை மாதம் சிதம்பரம் பஸ் நிலையத்தில் நிதி நிறுவனம் நடத்தி வந்த வாணி என்பவரிடம் ரூ.7 லட்சத்து 50 ஆயிரம் கடன் வாங்கியதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் வாணி கொடுத்த பணத்திற்கு அதிகமாக வட்டிக்கு வட்டி போட்டு பாக்கியலட்சுமியிடம் பணம் கேட்டு மிரட்டி வந்ததாக கூறப்படுகிறது. கடந்த ஏப்ரல் மாதம் 6-ம் தேதி பாக்கியலட்சுமியிடம் வாணி மற்றும் அவரது ஆதரவாளர்கள் கந்துவட்டி கேட்டு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.
இதுகுறித்து பாக்கியலட்சுமி அண்ணாமலை நகர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் கந்துவட்டி சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து வாணி மற்றும் அவரது ஆதரவாளர்களை வலைவீசி தேடி வந்தனர்.
இந்நிலையில் இந்த வழக்கில் தேடப்பட்டு வந்த மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகா புத்தூரை சேர்ந்த சேட்டு என்கிற நாகூர் மீரான் (44), சிதம்பரம் கனகசபை நகர் 6-வது குறுக்கு தெருவை சேர்ந்த சுரேந்தர்(32) ஆகிய 2 பேரையும் போலீசார் நேற்று கைது செய்தனர். மேலும் வாணி, அவரது உதவியாளர் ரேகா ஆகியோரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.