மயிலாடுதுறையில், எஸ்.டி.பி.ஐ. கட்சியின் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் முகமது ரவூப் தலைமை தாங்கினார்.
மாவட்ட செயற்குழு உறுப்பினர் சாகுல் ஹமீது வரவேற்று பேசினார். கட்சியின் மாவட்ட தலைவர் ஆத்தூர் பைசல் ரகுமான், தேசிய லீக் கட்சியின் மாநில அமைப்பு செயலாளர் ஷாஜகான், ஏகத்துவ முஸ்லிம் ஜமாத் தமீமுல் அன்சாரி மற்றும் மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஜெயராமன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மண்டல செயலாளர் வேலு குபேந்திரன், தமிழர் உரிமை இயக்கத்தின் அமைப்பாளர் சுப்பு மகேஷ் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.
மதவாத சூழ்ச்சிகளுக்கு துணை போகாமல் சட்டத்தின் ஆட்சியை மத்திய, மாநில அரசுகள் நிலைநிறுத்த வேண்டும் என வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.
இதேபோல, தமிழக மக்கள் ஒற்றுமை மேடை என்ற அமைப்பின் சார்பில் மயிலாடுதுறை கிட்டப்பா அங்காடி முன்பு அந்த அமைப்பின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மாரியப்பன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில், மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட தலைவர் ஷேக் அலாவுதீன் உள்பட பலர் கலந்து கொண்டனர். டெல்லியில், இஸ்லாமியர்களின் வீடுகளை இடித்ததை கண்டித்தும், ராம நவமி, அனுமன் ஜெயந்தி விழா போன்ற விழாக்களை பயன்படுத்தி மத மோதல்கள் ஏற்படுத்த முயற்சிக்கும் போக்கை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டன.