சென்னை, வியாசர்பாடி பெரியார் நகர் மணிமேகலை தெருவை சேர்ந்தவர் பால்பாண்டியன். இவரது மனைவி மீனாட்சி (வயது 40), மகன் பத்மநாபன் (18) நேற்று முன்தினம் வீட்டின் வெளியே நின்று பேசிக்கொண்டு இருந்தனர்.
அப்போது அந்த வழியாக குடிபோதையில் வந்த 5 பேர் பத்மநாபன் கையில் இருந்த செல்போனை பிடுங்கி அவரை தாக்கியுள்ளனர். இதை தட்டிக்கேட்ட மீனாட்சியை கல்லால் தாக்கிவிட்டு தப்பி சென்றனர்.
இந்த தாக்குதலில் காயமடைந்த மீனாட்சி அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுகுறித்து செம்பியம் போலீசார் வழக்குப்பதிவு செய்து வியாசர்பாடி பெரியார் நகரை சேர்ந்த பார்த்திபன் (21), எஸ்.வி.எம். நகரை சேர்ந்த சுந்தர் (21), பெரம்பூரை சேர்ந்த 17 வயது சிறுவன் ஆகியோரை கைது செய்தனர்.
சிறுவனை சிறுவர் சீர்திருத்த பள்ளியிலும் மற்ற 2 பேரை சிறையிலும் அடைத்தனர். மேலும், தப்பி சென்ற 2 பேரை தேடி வருகின்றனர்.