காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரத்தின் சென்னை நுங்கம்பாக்கத்தில் அமைந்துள்ள வீடு உள்ளிட்ட இடங்களில் நேற்று சிபிஐ சோதனை நடைபெற்றது. இந்நிலையில், கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் கைது செய்யப்பட்டுள்ளார்.
முறைகேடாக விசா பெற்று தந்தது தொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம், அவரது மகன் கார்த்தி சிதம்பரம் ஆகியோருக்கு சொந்தமான இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். சென்னை, டெல்லி, மும்பை உள்ளிட்ட 6 நகரங்களில் உள்ள 10 இடங்களில் சோதனை நடைபெற்றது.
சோதனை குறித்து ட்விட்டரில் பதிவிட்ட கார்த்தி சிதம்பரம், சோதனை நடைபெறுவது எத்தனையாவது முறை என்று தனக்கு தெரியவில்லை என்றும், நிச்சயமாக சாதனை எண்ணிக்கை தான் என்றும் குறிப்பிட்டார்.
இதேபோல், ப.சிதம்பரம் வெளியிட்டுள்ள பதிவில், சோதனை தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் காண்பித்த முதல் தகவல் அறிக்கையில் தனது பெயர் இல்லை என கூறினார். சோதனையில் எதுவும் கிடைக்கவில்லை என தெரிவித்த அவர், சோதனை நடைபெறுவது சுவாரஸ்யமானது என பதிவிட்டார்.
இந்நிலையில், நேற்று 6 மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்ற சோதனை நிறைவு பெற்றது. சோதனைக்கான காரணம் குறித்த அறிக்கையை சிபிஐ தரப்பு வெளியிட்டது.
அதில், பஞ்சாப் மாநிலம் மான்சாவில் உள்ள அனல்மின் நிலையத்தில் பணியாற்ற சீன நாட்டினரை அழைத்து வந்தபோது விசா பெற்று தந்ததில் முறைகேடு நடைபெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீன நாட்டினர் 263 பேருக்கு பணி விசா வழங்கப்பட்டுள்ளதாகவும், உள்துறை அமைச்சகம் அனுமதித்த அளவைவிட அதிகமான சீன நாட்டினருக்கு அனல்மின் நிலையத்தில் பணியாற்ற விசா வழங்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஒரு நிறுவனத்தில் குறிப்பிட்ட அளவு வெளிநாட்டவர் மட்டுமே பணியாற்ற வேண்டும் என்ற விதி மீறப்பட்டுள்ளது என அறிக்கையில் தெரிவித்த சிபிஐ அதிகாரிகள், வேறு காரணங்களைக் கூறி சீன நாட்டினருக்கு விசா பெறப்பட்டதாக தெரிவித்துள்ளனர்.