தமிழ்நாட்டில் உள்ள ஊரகப்பகுதிகளின் தரத்தை மேம்படுத்த மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகளுக்காக ரூ.3000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள ஊரகப்பகுதிகளின் தரத்தை மேம்படுத்த மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகளுக்காக ரூ.3000 கோடி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. அதில், ஊரகப்பகுதிகளில் நிலத்தடி நீர்வளத்தை உயர்த்தவும் மேம்படுத்தவும், மண் அரிப்பை தடுக்கவும் ரூ.683 கோடி மதிப்பில் 10,000 தடுப்பணைகள் மற்றும் 5000 பண்ணைக்குட்டைகள் அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஊரகப்பகுதிகளில் விவசாயிகளின் விளைபொருட்களை சந்தைப்படுத்தவும், குக்கிராமங்களில் பள்ளிகள் மற்றும் மருத்துவமனைக்கு சென்றடையவும் ரூ.1346 கோடி மதிப்பில் சுமார் 4000 கி.மீட்டர் தொலைவிற்கு சாலைகள் அமைக்கப்படும் எனவும், ஊரகப்பகுதிகளில் இருந்து வெளியேறும் கழிவுநீரை மறுசுழற்சி மற்றும் மறுபயன்பாடு செய்ய 350 கி.மீ தொலைவிற்கு வடிகால் வசதி, 25000 சமுதாய உறிஞ்சி குழாய்கள் அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல, ஊரகப்பகுதிகளை பசுமையாக்கவும் சூழலை பாதுகாக்கவும் ரூ. 293 கோடி மதிப்பில் 69 லட்சம் மரக்கன்றுகள் நடப்படும் எனவும், ஊட்டச்சத்து மிக்க சமுதாயத்தை உருவாக்கும் நோக்கில் குழந்தைகள் மற்றும் கர்ப்பிணி பெண்கள் பயன்பெறும் வகையில் 59 கோடி மதிப்பில் 500 அங்கன்வாடி மையங்கள் அமைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மகளிர் பங்களிப்பினை உயர்த்தவும், சுய உதவிக்குழுக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு மூலம் முருங்கை மற்றும் தோட்டக்கலை நாற்றங்கால் மையங்கள் ரூ.92 கோடியில் ஏற்படுத்தப்படும் என தமிழ்நாடு அரசு உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.