ராஜிவ் காந்தி வழக்கில் வெற்றியை பெற்றது பேரறிவாளன் தான் என நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் வாரியத்தில் பணி நிரந்தரம் என்ற ஒற்றை கோரிக்கையை முன்வைத்து, தொடங்கப்பட்ட வேலைநிறுத்தப் போராட்டம் இன்று 6-வது நாளாக தொடர்கிறது. இந்நிலையில், 700க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலைநிறுத்த போராட்டத்டில் ஈடுபட்டு வருகின்றனர். பட்டினப்பாக்கத்தில் நடந்துகொண்டு இருக்கும் இந்த போராட்டத்திற்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆதரவு தெரிவித்து போராட்டத்தில் கலந்துகொண்டார்.
அப்போது பேசிய அவர், அரசு உங்கள் உழைப்பை, தனியார் நிறுவன வருமானத்திற்கு தாரை வாக்கப் பார்க்கிறது என்று குற்றச்சாட்டு தெரிவித்தார். மேலும், தொடர்ச்சியாக போராடுவோம் என்றும், போராட்டத்திற்கு எப்பொழுதும் நாங்கள் உறுதுணையாக இருப்போம் என்றும் அவர்களிக்கு உறுதியளித்த அவர், தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் அமர்ந்து அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார். அதன் பின்னர் செய்தியார்களை சந்தித்த அவர், நாம் தூய்மை இந்தியாவை பற்றி பேசுகிறோம். ஆனால், தூய்மைப் பணியாளர்கள் நிரந்தர பணி இல்லாமல் அவஸ்தை படுவதாக தெரிவித்தார்.
மேலும், தனியார் ஒப்பந்தத்தை ரத்து செய்துவிட்டு இவர்களுக்கு பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்த அவர், போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் சாம்பள உயர்வு கேட்கவில்லை, பணி உயர்வு தான் கேட்கிறார்கள் என தெரிவித்தார். தமிழ்நாடு அரசு இதை காலம் கடத்தி போராட்டத்தை நீர்த்துப் போகச் செய்யாமல், உடனடியாக அழைத்து பேசி தீர்வு காண வேண்டும் எனவும் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், ராஜிவ் காந்தி வழக்கில் வெற்றியை பெற்றது பேரறிவாளன் தான், அவரே சட்டங்களை படித்து, சட்ட நிபுணர்களுடன் ஆலோசித்து இந்த வழக்கை முடித்து வென்றுள்ளார். மற்ற யாரும் இதற்கு காரணம் இல்லை என நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.