தரங்கம்பாடி, மே- 24;
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தேர்வுநிலை பேரூராட்சியில் அமைந்துள்ள திடக்கழிவு மேலாண்மை கிடங்கை பூம்புகார் சட்டமன்ற உறுப்பினரும் நாகை வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளருமான நிவேதா எம் முருகன் ஆய்வு செய்தார்.
தரங்கம்பாடி பேரூராட்சியில் 18 வார்டுகளில் பேரூராட்சி சார்பில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை செயல்படுத்த வீடுகளுக்கு மக்கும் குப்பைகளை சேகரிக்க பச்சை நிற குப்பை கொடைகள் வழங்கப்பட்டுள்ளது பச்சை நிற கூடையில் மக்கும் குப்பைகளை மட்டும் சேகரித்து பேரூராட்சியில் இருந்து வரும் தூய்மை பணியாளர்களிடம் வழங்குவதற்கான ஆணைகளை பேரூராட்சி மன்றத் தலைவர் சுகுண சங்கரி அறிவித்திருந்தார். அதனடிப்படையில் வீடுகளில் தினந்தோறும் தூய்மைப் பணியாளர்களால் குப்பைகளை சேகரித்து தரங்கம்பாடி தேர்வுநிலை பேரூராட்சி கிடங்கில் மக்கும் குப்பை மக்கா குப்பை தரம் பிரித்து உரங்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றனர்.
பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா எம் முருகன் பேரூராட்சியின் குப்பைகளை மறுசுழற்சி செய்து உரமாகும் கிடங்கிற்கு நேரில் பார்வையிட்டார். அங்கு மண்புழு தயாரிக்கும் பணிகள் மற்றும் இயற்கை உரங்கள் தயாரிக்கும் கிடங்கு, நெகிழி பிரித்து எடுக்கும் இயந்திரங்களை பார்வையிட்டார். மேலும் தரங்கம்பாடி பேரூராட்சி செயல் அலுவலர் பூபதி கமலகண்ணன் இடம் விளக்கம் கேட்டறிந்தார். பின்னர் கிடங்கின் வளாகத்தில் மரக்கன்று நட்டு வைத்து பொதுமக்களுக்கு நகரத்தின் தூய்மையை பற்றிய விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினார்.
ஆய்வின்போது பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் பொன்.ராஜேந்திரன், பேரூராட்சி சுகாதார ஆய்வாளர் இளங்கோவன், பேரூராட்சி திமுக அவைத்தலைவர் கந்தசாமி மற்றும் தரங்கம்பாடி பேரூராட்சி வார்டு உறுப்பினர்கள், கிடங்கு பணியாளர்கள், பசுமை நண்பர்கள், பேரூர் திமுக பொறுப்பாளர்கள் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
மாவட்ட செய்தியாளர்: இரா.யோகுதாஸ்.