தமிழக கடலோர மாவட்டங்களில் மீன்பிடி தடைக்காலம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த தடைக்காலத்தை பயன்படுத்தி மீனவர்கள் தங்கள் விசைப்படகுகளை பராமரிப்பது, என்ஜின்களை பழுது நீக்குவது உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்தநிலையில் பழுது நீக்கம் செய்யப்பட்ட விசைப்படகுகளை ஆய்வு செய்யும் பணி நேற்று நாகை மாவட்டத்தில் தொடங்கியது. இதற்காக மீனவர் மற்றும் மீனவர் நலத்துறை துணை இயக்குனர் காத்தவராயன் தலைமையில் உதவி இயக்குனர்கள் ஜெயராஜ், கொளஞ்சிநாதன், ரத்தினம் ஆகியோர் முன்னிலையில் மீன்வளத்துறையை சேர்ந்த 8 குழுக்கள் அமைக்கப்பட்டன. ஒவ்வொரு குழுவிலும் ஒரு மீன்வளத்துறை இன்ஸ்பெக்டர், மேற்பார்வையாளர் என 2 அதிகாரிகளை கொண்டு விசைப்படகுகள் ஆய்வு செய்யப்பட்டது.
அப்போது விசைப்படகின் நீளம், அகலம், உயரம், என்ஜின் திறன், படகு உரிமையாளரின் ஆதார் எண், படகு உரிமம் எண், மீனவர் நல வாரிய அடையாள அட்டை, மீனவர்களுக்கு வழங்கப்படும் வாக்கி டாக்கி என அனைத்தும் ஆய்வு செய்யப்பட்டது. நாகை மாவட்டத்தில் நாகை மீன்பிடி துறைமுகம், நாகூர் பட்டினசேரி, செருதூர், ஆற்காட்டுத்துறை ஆகிய இடங்களில் 520-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளை மீன்வளத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். தொடர்ந்து படகுகளில் தடை செய்யப்பட்ட அதிக குதிரைத்திறன் கொண்ட என்ஜின்கள் பயன்படுத்தப்பட்டு உள்ளனவா? என்பது குறித்தும், தடை செய்யப்பட்ட சுருக்குமடி, இரட்டைமடி வலைகள் பயன்படுத்தப்பட்டு வருகிறதா? என்பது குறித்தும் ஆய்வு செய்தனர்.