மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி வட்டத்திற்குட்பட்ட 70 வருவாய் கிராமங்களுக்கான வருவாய் நிர்வாக கணக்குகள் முடித்தல் தொடர்பான ஜமாபந்தி நிகழ்ச்சியானது கடந்த 17.05.2022 முதல் 26.05.2022 வரையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் 70 வருவாய் கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் தங்களுடைய கோரிக்கை தொடர்பாக மனு அளித்துள்ளனர். ஜமாபந்தி நிகழ்ச்சியானது சீர்காழி வருவாய் கோட்டாட்சியரும் ஜமாபந்தி அலுவலருமான திரு. நாராயணன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. ஜமாபந்தி நிகழ்ச்சியின்போது மொத்தமாக 427 நபர்களிடமிருந்து மனுக்கள் பெறப்பட்டுள்ளது. மேற்படி மனுக்களை தொடர்புடைய துறைகளுக்கு பிரித்து அனுப்பி வைக்கப்பட்டு, உடனடியாக தீர்வு காணப்படும் என ஜமாபந்தி அலுவலர் அவர்களால் தெரிவிக்கப்பட்டது.
ஜமாபந்தி நிகழ்ச்சியில் வருவாய்க் கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளர் திரு.சண்முகம், தரங்கம்பாடி வட்டாட்சியர் திருமதி. புனிதா, சமூக பாதுகாப்பு திட்ட தனி வட்டாட்சியர் திருமதி. இந்துமதி, நில எடுப்பு தனி வட்டாட்சியர் திருமதி.சுந்தரி, வட்ட வழங்கல் அலுவலர் பாபு, தலைமை நில அளவர் சங்கர், மண்டல துணை வட்டாட்சியர் சதீஷ்குமார், தேர்தல் துணை வட்டாட்சியர் விஜயராணி, தலைமையிடத்து துணை வட்டாட்சியர் பாலமுருகன், வருவாய் ஆய்வாளர்கள் பிரகாஷ், சௌந்தரவள்ளி, கவிதா, சசிகலா, அனைத்து கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் இதர துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர். நிறைவு நாளன்று 23 பயனாளிகளுக்கு முதியோர், விதவை உதவித்தொகையும், 16 பயனாளிகளுக்கு புதிய மின்னணு குடும்ப அட்டையும் ஜமாபந்தி அலுவலர் நாராயணன் அவர்களால் வழங்கப்பட்டது.
செய்தியாளர்: சதீஷ்மாதவன்