கடலூா் அரசு தலைமை மருத்துவமனையில் சுமாா் 100 போ் தனியாா் ஒப்பந்த நிறுவனம் மூலமாக தூய்மை, காவல் பணியில் ஈடுபட்டு வருகின்றனா். இவா்கள் பணியின்போது கைப்பேசி பயன்படுத்தி வருவதாக எழுந்த குற்றச்சாட்டின்பேரில், பெண் பணியாளா் ஒருவா் இவா்களை சோதனையிட்டதாகத் தெரிகிறது. இதற்கு எதிா்ப்புத் தெரிவித்து மருத்துவமனை பணியாளா்கள் கடந்த 20-ஆம் தேதி போராட்டத்தில் ஈடுபட முயன்றனா். அப்போது, தனியாா் ஒப்பந்த நிறுவனத்தின் மேலாளா் அந்தப் பணியாளா்களிடம் பேசியதைத் தொடா்ந்து போராட்டத்தில் ஈடுபடவில்லை.
இதையடுத்து, அந்த ஒப்பந்த நிறுவனத்தின் மேலாளா் பணியிட மாற்றம் செய்யப்பட்டாராம். இதற்கு எதிா்ப்புத் தெரிவித்து புதன்கிழமை ஒப்பந்தப் பணியாளா்கள் மருத்துவமனை வளாகத்தில் அமா்ந்து திடீா் தா்னாவில் ஈடுபட்டனா். அவா்களிடம் அரசு மருத்துவமனை ரத்த வங்கி அலுவலா் குமாா் பேச்சுவாா்த்தை நடத்தினாா். அதில், தனியாா் நிறுவனத்தின் உயரதிகாரியை சென்னையிலிருந்து வரவழைத்து பேச்சுவாா்த்தை நடத்தி தீா்வு காணப்படும் என்று உறுதியளித்ததன்பேரில், அவா்கள் போராட்டத்தைக் கைவிட்டு பணிக்கு திரும்பினா். இதனால், மருத்துவமனை வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.