சென்னை நேரு உள் விளையாட்டரங்கில் நேற்று மாலை நடைபெற்ற அரசு விழாவில் கலந்துகொண்ட பிரதமர் நரேந்திர மோடி, ரூ. 31, 400 கோடி மதிப்பிலான திட்ட பணிகளை தொடங்கி வைத்தார். முடிவுற்ற திட்டப் பணிகளை நாட்டுக்கு அர்ப்பணித்தார். நிகழ்வில் ஆளுநர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
நிகழ்வின் இறுதியாக அனைவருக்கும் வணக்கம் எனக் கூறி உரையைத் தொடங்கிய பிரதமர், “தமிழகத்தில் இருப்பது எப்போதும் சிறப்பானது. தமிழ்நாட்டு மக்களின் கலாச்சாரம், மொழி ஆகியவை எப்போதும் மிக அருமையான ஒன்றாகும். பெருமை நிறைந்த பாரதியார், செந்தமிழ் நாடெனும் போதினிலே இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே என மிக அழகாக பாடியுள்ளார். ஒவ்வொரு துறையிலும் தமிழ்நாட்டைச் சேர்ந்த யாராவது ஒருவர் தலைசிறந்தவராக விளங்குகிறார்கள். மிகவும் சிறப்பான இடம் தமிழ்நாடு” என்று கூறினார்.
இந்திய காது கேளாதோருக்கான ஒலிம்பிக் குழுவினருக்கு எனது இல்லத்தில் விருந்து அளித்தேன். நமது வீரர்கள் வென்ற பதக்கங்களில் தமிழக வீரர்களின் பங்களிப்பும் இருந்தது. இது மிகச் சிறந்த பங்களிப்புகளில் ஒன்றாகும் என்று பாராட்டிய பிரதமர்,
“தமிழ் மக்கள் சிறப்பானவர்கள். தமிழ் மொழி நிலையானது. தமிழ் கலாச்சாரம் உலகளாவியது. சென்னை முதல் கனடா வரை, மதுரை முதல் மலேசியா வரை, நாமக்கல் முதல் நியூயார்க் வரை பொங்கல் மற்றும் புத்தாண்டு மிகுந்த ஆர்வம் நிறைந்தவை. பிரான்ஸில் கேன்ஸ் நகரில் நடைபெற்ற திரைப்பட விழாவில் தமிழக மைந்தர் எல்.முருகன், தமிழக பாரம்பரிய உடையில் பங்கேற்றார். இது உலகளவில் மிகவும் பிரபலமானது” என்றார்.
மேலும், “தமிழ்நாட்டின் வளர்ச்சியில் மேலும் ஒரு அத்தியாயத்தை கொண்டாட நாம் இங்கு கூடியிருக்கிறோம். ரூ.31ஆயிரத்துக்கும் அதிகமான திட்டங்கள் இங்கு தொடங்கப்பட்டுள்ளன” என்றும் கூறினார்.