சீர்காழி மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி, கொள்ளிடம், திருவெண்காடு, மாதானம், திருமுல்லைவாசல், வைத்தீஸ்வரன் கோவில், எடமணல், புத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பொதுமக்கள் கடந்த ஒரு மாதமாக அக்னி வெயிலின் தாக்கத்தால் கடும் இன்னல்களுக்கு ஆளாகி வந்தனர்.வெயிலில் இருந்து தங்களை காத்துக்கொள்ளும் வகையில் குளிர்பானங்கள், பழச்சாறு, தர்பூசணி, வெள்ளரிக்காய், நுங்கு உள்ளிட்டவைகளை வாங்கி பருகியும், சாப்பிட்டும் தாகத்தை போக்கி வந்தனர். இந்நிலையில் நேற்று இரவு சீர்காழி பகுதியில் பலத்த இடியுடன் கனமழை பெய்தது. இதன் காரணமாக மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால், பொதுமக்கள் அவதிப்பட்டனர். இந்த மழையால் குறுவை சாகுபடி செய்த விவசாயிகள் மற்றும் பருத்தி சாகுபடி செய்த விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
கொள்ளிடம் இதேபோல, கொள்ளிடம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் அக்னி வெயிலால் மக்கள் மிகவும் அவதிப்பட்டு வந்தனர். இந்தநிலையில் நேற்று மாலை 5 மணியளவில் வானில் கருமேகங்கள் சூழ்ந்தன. அதனைத்தொடர்ந்து இடி-மின்னலுடன் சுமார் ½ மணி நேரம் கனமழை பெய்தது. தொடர்ந்து மிதமான மழை பெய்தது.இந்த மழையின் காரணமாக வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியது. இந்த மழையால் பருத்தி பயிரிட்ட விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் மழை பெய்தது.