மூத்த பத்திரிகையாளர் ஐ.சண்முகநாதனுக்கு கலைஞர் எழுதுகோல் விருதினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வழங்கி கவுரவிக்கவுள்ளார்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் செய்தி மக்கள் தொடர்புத் துறை மானியக் கோரிக்கையில், இதழியல் துறையில் சமூக மேம்பாட்டிற்காகவும், விளிம்புநிலை மக்களின் மேம்பாட்டிற்காகவும் பங்காற்றிவரும் ஒரு சிறந்த இதழியலாளருக்கு ஆண்டுதோறும் ‘கலைஞர் எழுதுகோல் விருது’ மற்றும் ஐந்து இலட்சம் ரூபாய் பரிசுத் தொகை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதன்படி 2021-ஆம் ஆண்டிற்கான ‘கலைஞர் எழுதுகோல் விருதுக்கு மூத்த பத்திரிகையாளர் ஐ.சண்முகநாதன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பிறந்தநாளையொட்டி இன்று நடைபெறும் விழாவில், கலைஞர் எழுதுகோல் விருதினை மூத்த பத்திரிகையாளர் ஐ.சண்முகநாதனுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கி சிறப்பிக்கவுள்ளார்.
தமிழ்த் திரையுலகில் சிறந்து விளங்கிய வாழ்நாள் சாதனையாளருக்கு கருணாநிதி பெயரில் “கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருது வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதன்படி பலநூறு திரைப்படங்களுக்கு வசனங்கள் எழுதிய புகழ்பெற்ற வசனகர்த்தா ஆரூர்தாஸ்க்கு கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். இன்று நடைபெறும் கருணாநிதி பிறந்தநாள் விழாவில், ஆரூர்தாஸ்-க்கு கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருதும், பத்து லட்சம் ரூபாய் பரிசுத் தொகையும் வழங்கப்படவுள்ளது.