சேலத்தில் பெண் குழந்தைகள் பாதுகாப்பை வலியுறுத்தி 7 மாணவ-மாணவிகள் கண்களை கட்டிக் கொண்டு 13 கிலோ மீட்டர் சைக்கிள் பயணம் மேற்கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
தமிழகத்தில் பெண் குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இதனை தடுக்கும் விதமாக அரசு மற்றும் தன்னார்வ அமைப்பின் சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் இன்று காலை சேலத்தைச் சேர்ந்த பள்ளி மாணவ மாணவிகள் ஏழு பேர் கண்களை கட்டிக்கொண்டு விழிப்புணர்வு சைக்கிள் பயணம் மேற்கொண்டனர்.
இந்த சைக்கிள் பயணத்தை சேலம் வடக்கு காவல் துணை ஆணையாளர் மாடசாமி கொடியசைத்து தொடக்கி வைத்தார். ஏற்காடு அடிவாரம் பகுதியில் தொடங்கிய இந்த சைக்கிள் பயணம், கோரிமேடு, அஸ்தம்பட்டி, தமிழ் சங்கம் சாலை வழியாக வந்து, சேலம் காந்தி விளையாட்டு மைதானத்தில் நிறைவு பெற்றது. பெண் குழந்தைகள் மற்றும் பெண்கள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் ஏழு பள்ளி மாணவ- மாணவிகள் கண்களை கட்டிக்கொண்டு 13 கிலோ மீட்டர் சைக்கிள் பயணம் மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது. கண்களை கட்டிக் கொண்டு மாணவ மாணவிகள் சைக்கிள் பயணத்தை மேற்கொண்டது வாகன ஓட்டிகளிடம் வியப்பையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியது.