செவிலியர்கள் போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்படுள்ளதாக தமிழ்நாடு எம்.ஆர்.பி செவிலியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
2015-ஆம் ஆண்டு மருத்துவ தேர்வு வாரியத்தின் தேர்வில் வெற்றி பெற்ற 12 ஆயிரம் செவிலியர்கள் தொகுப்பூதிய செவிலியர்களாக பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு பணி நிரந்தரம் வழங்கக் கோரி சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டம் அருகில் 300-க்கும் மேற்பட்ட செவிலியர்கள் ஒன்று கூடி சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்நிலையில், தொடர்ந்து மறியலில் ஈடுபட்ட செவிலியர்களை காவல்துறையினர் வலுக்கட்டாயமாக கைது செய்தனர்.
போராட்டம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய செவிலியர் காந்திமதி, கடந்த 2015-ஆம் ஆண்டு முதல் அரசு நடத்தக்கூடிய தேர்வில் வெற்றி பெற்றும் தற்காலிகமாக தொகுப்பூதியத்தில் பணியாற்றி வருகிறோம், இதனால் எங்களுடைய வாழ்வாதாரம் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது திமுக அரசு தங்களுடைய தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்தபடி எங்களை உடனடியாக பணி நிரந்தரம் செய்ய வேண்டும். அதற்கான உத்தரவாதத்தை மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் தெரிவிக்க வேண்டும். காவல்துறையினர் எங்களை அவதூறாக பேசி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களை வலுக்கட்டாயமாக கைது செய்துள்ளனர். இது கண்டிக்கத்தக்கது என குறிப்பிட்டார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறுகையில், ஒப்பந்த ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய முடியாது. MRB மூலம் தற்காலிகமாக பணிக்கு வந்தவர்களை மட்டுமே பணி நிரந்தரம் செய்ய முடியும். பணி நிரந்தரம் மேற்கொள்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. யாருடைய தூண்டுதலின் பேரிலும் வெயிலில் உடலை வருத்திக்கொண்டு செவிலியர்கள் போராட வேண்டாம். செவிலியர்களுக்கு அரசு துணை நிற்கும் என்று தெரிவித்தார்.
மேலும், நிதி ஆதாரத்தை கணக்கில் கொண்டு செவிலியர்கள் பணி அமர்த்தப்படுவார்கள் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியம் செவிலியர்களின் பிரதிநிதிகளிடம் வாக்குறுதி அளித்துள்ளார். 2020-ஆம் ஆண்டு வரை பணியில் சேர்ந்தவர்கள் 5 ஆயிரம் பேருக்கு வாய்ப்பு வழங்க வழிவகை உள்ளதா என கலந்து ஆலோசித்து முடிவு செய்யப்படும் எனவும் பேச்சு வார்த்தை போய்க்கொண்டு உள்ளது என்றும் தெரிவித்தார்.
இந்நிலையில், 16,000 செவிலியர்களில் 5000 பேருக்கு அடுத்த 6 மாதத்திற்குள் பணி நிரந்தரம் செய்யப்படும் என்று அமைச்சர் மா.சுப்ரமணியன் வாக்குறுதியளித்ததை அடுத்து, தற்காலிகமாக போராட்டம் வாபஸ் பெறப்படுவதாக தமிழ்நாடு எம்.ஆர்.பி செவிலியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.