மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுகாவுக்கு உட்பட்ட 90 ரேஷன் கடைகளுக்கு செம்பனார்கோயில் அருகே கிடாரங்கொண்டான், பொன்செய் கிராமத்தில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக கிடங்கில் இருந்து ரேஷன் பொருட்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன. இந்த கிடங்கில் இருந்து கடந்த மே 21-ஆம் தேதி முதல் ஜூன் மாதத்திற்கு தேவையான ரேஷன் பொருட்கள் அனுப்பி வைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. வருகிற 18-ஆம் தேதி வரை நடைபெறும் இந்த பணியை நேற்று தரங்கம்பாடி வட்ட வழங்கல் அலுவலர் பாபு, நுகர்பொருள் வாணிப கழக கிடங்கிற்கு நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது அவர், ரேஷன் கடைகளுக்கு அனுப்பி வைக்கப்படும் அத்தியாவசிய பொருட்களின் தரம் குறித்தும், சரியான எடையில் அத்தியாவசிய பொருட்கள் அனுப்பி வைக்கப்படுகிறதா என்பது குறித்தும் ஆய்வு செய்து, தரமான அரிசிகள் அனுப்பி வைக்கப்படுவதை உறுதி செய்தார். ஆய்வின்போது கிடங்கின் தரக்கட்டுப்பாட்டு ஆய்வாளர் ராகவன், எழுத்தர் மணிகண்டன், நகர்வு எழுத்தர்கள் பிரதீப், வடிவேல் ஆகியோர் உடனிருந்தனர்.
செய்தியாளர்: சதீஷ்மாதவன்