மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா பெரம்பூர் கிராமத்தில் 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த திரௌபதை அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் பக்தர்கள் வேண்டுவதை வேண்டிய மாத்திரத்திலேயே அம்பாள் அருளுவதால் இக்கோவிலில் தினந்தோறும் திரளான பக்தர்கள் வந்து தங்களது வேண்டுதலை அம்பாளிடம் முன்வைப்பதும், அவை நிறைவேறியதும் ஆண்டுதோறும் ஆனி மாதம் நடைபெறும் தீமிதி திருவிழாவில் கலந்துகொண்டு தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்துவது வழக்கம்.
அந்த வகையில் இவ்வாண்டு தீமிதி திருவிழா கடந்த மாதம் 30-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது தொடர்ந்து திங்கள் கிழமை காலை 9 மணிக்கு படுகள நிகழ்ச்சியும் தொடர்ந்து மாலை 6 மணிக்கு வீரசோழன் ஆற்றில் இருந்து பம்பை, மேள வாத்தியம் முழங்க கடம் புறப்பாடு செய்யப்பட்டு வீதி உலாவாக கோவிலுக்கு வந்தடைந்தது. இதனையடுத்து கோவிலுக்கு எதிரே இருந்த தீக்குண்டத்தில் கரகம் இறங்க அதனைத் தொடர்ந்து நூற்றுக்கணக்கான பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தி அம்பாளைத் தரிசனம் செய்தனர்.
தீமிதி திருவிழாவில் உள்ளூர் மட்டுமின்றி வெளியூர்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்பாளை தரிசித்தனர். விழா ஏற்பாடுகளை கிராம நாட்டாமைகள் பழனிவேல், சிவக்குமார், சங்கர், ராஜேந்திரன், முருகன் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர். பெரம்பூர் காவல் நிலைய ஆய்வாளர் சிவதாஸ் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
மாவட்ட செய்தியாளர்: இரா.யோகுதாஸ்.