மயிலாடுதுறை: ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் பருத்தி மூட்டைகள் மழையில் நனையும் வேதனை! சமூக ஆர்வலர் அ.அப்பர்சுந்தரம் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் தெரிவிக்கையில்,
“விவசாயிகள் கடனில் பிறக்கிறான், கடனோடு வாழ்கிறான். கடனுடன் சாகிறான் என்னும் நிரந்தரமான நிலைக்கு காரணம் யார்?. அதனை மாற்றப் போவதும் யார்? விவசாயிகள் கஷ்டப்பட்டு விளைவித்த நெல்மூட்டைகளாக இருக்கலாம், தானியங்களாக இருக்கலாம், தற்பொழுது பருத்தியாக இருக்கலாம். அத்தனையையும் அரசு கொள்முதல் நிலையங்களில் முறையாக உடனுக்குடன் எடுக்கப்படுகிறதா? மூட்டை மூட்டையாக அடிக்கி வைக்க உரிய ஷெட் வசதி இருக்கின்றதா? என்றால் பெரும்பாலும் கேள்விக்குறியாகவே இருந்து வருகிறது.
அரசின் கொள்முதல் நிலையங்களில் போதுமான பாதுகாப்பு வசதி இல்லாததால் ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகள் அதிக அளவில் நனைந்து வீணாகியதைத்தொடர்ந்து தற்பொழுது பருத்தி மூட்டைகளும் மயிலாடுதுறை பகுதிகளில் நனைந்து வீணாவது வருத்தம் அளிக்கின்றது.
எத்தனை காலம் தான் விவசாயிகளின் விளை பொருட்கள் நனைந்து வீணாகும். அதற்கு விடிவு காலமே கிடையாதா? பாடுபட்டு விளைவித்த பொருட்கள் வீணாவதை கண்டு மனம் வெந்து துடிக்கும் விவசாயிகளின் தவிப்பு அதிகாரிகளுக்கு தெரியவில்லையா? நஷ்டமும் கஷ்டமும் மட்டுமே விவசாயிகளின் நிரந்தர சொத்தாவிட்டதோ? அந்தோ பரிதாபம்., இவ்வாண்டு பருத்தி விலை அதிகரித்து விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்த நிலையில், கோடை மழையில் அரசு கொள் முதல் ஒழுங்குமுறை விற்பனை நிலையங்களில் அதிகாரிகளின் முன்னெச்சரிக்கையற்ற அலட்சியத்தால் பருத்தி மூட்டை நனைந்து வீணாகிக் கொண்டிருக்கிறது. விவசாயிகளின் வேதனையை வருங்காலத்திலாவது தடுத்து நிறுத்த முழுமையான நடவடிக்கைகள் மிகவும் அவசியமாகும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாகும்” என தெரிவித்துள்ளார்.