மயிலாடுதுறை சீர்காழி: சீர்காழி அருகே அரசு பஸ்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 18 பேர் காயம் அடைந்தனர். பஸ்கள் மோதல் மயிலாடுதுறை மாவட்டம் பொைறயாறில் இருந்து சிதம்பரம் நோக்கி நேற்று காலை ஒரு அரசு பஸ் சென்று கொண்டிருந்தது. இதேபோல் சிதம்பரத்தில் இருந்து காரைக்காலை நோக்கி புதுச்சேரி மாநில அரசு பஸ் வந்து கொண்டிருந்தது. சீர்காழி அருகே கோவில்பத்து புறவழிச்சாலையில் சென்றபோது இந்த 2 பஸ்களும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. 18 பேர் காயம் இந்த விபத்தில் 2 பஸ்களிளும் பயணம் செய்த சீர்காழி அருகே திட்டை கிராமத்தை சேர்ந்த முருகேசன்(வயது 47), கடலூர் மாவட்டம் ஆலப்பாக்கம் உமாபதி(25), கொள்ளிடத்தை சேர்ந்த கருணாநிதி(42), புதுச்சேரியை சேர்ந்த கருணாஜோதி(38) மற்றும் 2 பஸ்களின் டிரைவர்கள், கண்டக்டர்கள் உள்பட 18 பேர் காயம் அடைந்தனர்.
இதனை தொடர்ந்து அக்கம், பக்கத்தினர் காயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் சீர்காழி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அனுமதிக்கப்பட்டு உள்ள அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. போலீசார் விசாரணை இது குறித்து தகவல் அறிந்த சீர்காழி தாசில்தார் செந்தில்குமார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருபவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார். இதுதொடர்பாக சீர்காழி போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிமாறன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.