கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே தஞ்சை மாவட்ட எல்லையான அணைக்கரையில் கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே கீழணை அமைந்துள்ளது. கீழணையின் மொத்த நீர்மட்டம் 9 அடி ஆகும். இதன் மூலம் தஞ்சை, கடலூர், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களை சேர்ந்த சுமார் 1 லட்சத்து 70 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்கள் பாசனம் பெறுகிறது. இந்நிலையில் மேட்டூர் அணையில் இருந்து காவிரி ஆற்றில் அதிகப்படியான உபரி நீர் தற்போது வெளியற்றப்பட்டு வருகிறது.
இதனால் கல்லணையில் இருந்து கொள்ளிடம் ஆற்றில் அதிகளவில் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. வெள்ள அபாய எச்சரிக்கை அந்த வகையில் நேற்று மாலை நிலவரப்படி கொள்ளிடத்தில் வினாடிக்கு 1 லட்சத்து 85 ஆயிரம் கனஅடி தண்ணீர் என்கிற நிலையில் நீர்வரத்து இருந்தது. இதனால் கீழணையில் இருந்து கொள்ளிடம் ஆற்றில் வினாடிக்கு ஒரு லட்சத்து 90 ஆயிரம் கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் கொள்ளிடம் ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடி வங்க கடலில் கலந்து வருகிறது. வெள்ளப்பெருக்கு காரணமாக காரையோர பகுதிகளில் வசிக்கும் கிராம மக்களுக்கும் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அமைச்சர் பார்வையிட்டார்:
காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள எய்யலூர் கொள்ளிடம் ஆற்றில் கரையோரம் உள்ள சொர்ணபுரிஸ்வரர் கோவில் வளாகத்தை சுற்றிலும் தண்ணீர் சூழ்ந்துள்ளது. மேலும் சிதம்பரம் அருகே கொள்ளிடம் கரையோரம் உள்ள கிராமங்களான திட்டுக்காட்டூர், கீழக்குண்டலப்பாடி, ஜெயங்கொண்ட பட்டினம், அக்கறை ஜெயங்கொண்டபட்டினம் உள்ளிட்ட 4 கிராமங்களை வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. இதில் அக்கறை ஜெயங்கொண்டபட்டினம் கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் திட்டுக்காட்டூர் புயல் பாதுகாப்பு மையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தேவையான உணவு வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் நேற்று மாலை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் பாதிக்கப்பட்ட கிராமங்களை நேரில் பார்வையிட்டதோடு, அங்கு மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தினார்.
பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம்:
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், கொள்ளிடம் கரையோரம் உள்ள திட்டுக்காட்டூர், கீழகுண்டலபாடி, ஜெயங்கொண்டபட்டினம், அக்கறை ஜெயங்கொண்டபட்டினம் ஆகிய கிராம மக்கள் அச்சப்பட வேண்டாம். பொதுமக்கள் அனைவரையும் புயல் பாதுகாப்பு மையத்தில் தங்க வைத்து அவர்களுக்கு தேவயைான அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பொதுப்பணித்துறை, வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் மீட்பு குழுவினர் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். அவர்கள், ஏற்கனவே கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுத்து, பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைத்துள்ளனர். வெள்ளத்தால் பாதிப்பு ஏற்படும் இடங்களை சீரமைக்க, தேவையான மணல் மூட்டைகள், தடுப்புக் கட்டைகள் தயாராக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார். அப்போது அவருடன் மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியம், சிதம்பரம் நீர்வளத் துறை செயற்பொறியாளர் காந்தரூபன், சிதம்பரம் கோட்டாட்சியர் ரவி, நீர்வளத்துறை உதவி செயற்பொறியாளர்கள் குமார், ஞானசேகரன், உதவி பொறியாளர் ரமேஷ், சிதம்பரம் தாசில்தார் ஹரிதாஸ், பெராம்பட்டு சங்கர், அண்ணாமலை நகர் பேரூராட்சி மன்ற தலைவர் பழனி மற்றும் மருத்துவ குழுவினர், அனைத்து துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.