மயிலாடுதுறை- ஆகஸ்ட்- 09;
மயிலாடுதுறை, கூறைநாடு புனித அந்தோணியார் பங்கு ஆலயத்தில் திவ்ய நற்கருணை பெருவிழா சிறப்பு திருப்பலி மற்றும் நற்கருணை பவனி நடைபெற்றது.
முதல் நிகழ்வாக, புனித அந்தோணியார் தொடக்கப்பள்ளி வளாகத்தில் சிறப்புத் திருப்பலி நடைபெற்றது. புதுக்கோட்டை செட்டியாபட்டி பங்குதந்தை சவரிநாதன் அடிகளார், எருக்கூர் பங்குதந்தை ஜோசப் செல்வராஜ் அடிகளார், குத்தாலம் பங்குதந்தை ஜெர்லின் கார்ட்டர் அடிகளார் இணைந்து திருப்பலி நிறைவேற்றினர்.
தொடர்ந்து திவ்ய நற்கருணை பவனி நடைபெற்றது. அந்தோணியார் தொடக்கப்பள்ளி வளாகத்தில் தொடங்கிய பவனி இராதாகிருஷ்ணன் நகர், கொண்டாரெட்டித்தெரு வழியாக புனித அந்தோனியார் ஆலயத்தை வந்தடைந்தது. திரு இருதய சபை அருட்சகோதரர் பங்கிராஸ் பவனியை வழிநடத்தினார்.
பின்னர் ஆலய வளாகத்தில் திவ்ய நற்கருணை ஆராதனை நடைபெற்றது. மாந்தை உதவி பங்குதந்தை அலெக்சாண்டர் அடிகளார் மறையுரையாற்றினார். புனித அந்தோனியார் ஆலய பங்குதந்தை ஜான் பிரிட்டோ அடிகளார் உலக அமைதிக்காகவும், கொரோனா தொற்று முற்றிலும் ஒழிய வேண்டியும், சமத்துவம் சகோதரத்துவம் நிலைத்திட வேண்டியும் சிறப்பு பிரார்த்தனை வழிபாடு மேற்கொண்டார். மயிலாடுதுறை மறைவட்ட அதிபர் தார்சிஸ் அடிகளார் திவ்ய நற்கருணை ஆசிர் வழங்கினார்.
இதில் அருட்சகோதரர்கள், அருட்சகோதரிகள், பங்கு மன்றத்தினர், அன்பியக் குழுவினர், மரியாயின் சேனையினர், கிளை கிராம நிர்வாகிகள், பலிபீட சிறுவர்கள், பாடகற்குழுவினர், இளையோர் மற்றும் பங்கு மக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
விழாவிற்கான ஏற்பாடுகளை பங்குத்தந்தை ஜான் பிரிட்டோ அடிகளார் தலைமையில் விழாக் குழுவினர் ஏற்பாடு செய்திருந்தனர்.
மாவட்ட செய்தியாளர்: இரா.யோகுதாஸ்.