காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் 12 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களாகக் கர்நாடகாவில் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக, காவிரி ஆற்றில் அதிக அளவு நீர் திறந்துவிடப்படுகிறது. மேலும் தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளான தேன்கனிக்கோட்டை, நாட்றாபாளையம், அஞ்செட்டி, ராசிமணல், பிலிகுண்டுலு உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.
இதனால், கர்நாடகாவிலிருந்து தமிழ்நாட்டிற்கு வரும் நீரின் அளவு உயர்ந்து மேட்டூர் அணையின் நீர்மட்டம் கடந்த சில தினங்களுக்கு முன்பு முழுக் கொள்ளளவை எட்டியது. மேட்டூர் அணையில் நீர்மட்டம் 120 அடி முழு கொள்ளளவை எட்டி உள்ள சூழ்நிலையில் அணைக்கான நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து கொண்டே உள்ளது.
இன்று பிற்பகல் 2:30 மணி முதல் ஒரு லட்சத்து 50 ஆயிரம் கன அடியில் இருந்து ஒரு லட்சத்து 70 ஆயிரம் கன அடியாக அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நீர் வரத்து அதிகரிப்பு காரணமாக மேட்டூர் அணைக்கான நீர் வரத்து அப்படியே திறக்கப்படுகிறது. எனவே ஈரோடு, சேலம், நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட 12 மாவட்டங்களுக்கு பொதுப்பணித்துறை அதிகாரிகள் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
எனவே காவேரி கரையோரம் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் அனைவரும் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறும், அவர்களின் உயிர் மற்றும் உடைமைகளின் பாதுகாப்பு பாதுகாப்பிற்குமான அனைத்து நடிவடிக்கைகளும் மேற்கொள்ளுமாறு மாவட்ட நிர்வாகங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.