0 0
Read Time:7 Minute, 49 Second

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள நாதல்பபடுகை, முதலைமேடுதிட்டு வெள்ளமணல் கோரை திட்டு ஆகிய கொள்ளிடம் ஆற்றின் கரையோரம் உள்ள திட்டு கிராமங்கள் கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் கடந்த 20 தினங்களாக தண்ணீர் சூழ்ந்து காணப்பட்டது. கடந்த 40நாட்களில் 3வது முறையாக கொள்ளிடம் ஆற்றில் வெள்ளபெருக்கு ஏற்பட்டு திட்டு,படுகை பகுதி கிராம மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த சில வாரங்களுக்கு முன்னர் ஏற்பட்ட வெள்ளபெருக்கு ஈரம் காய்வதற்குள் மீண்டும் அடுத்து , அடுத்து வெள்ள பாதிப்பு மக்களின் இயல்பு வாழ்க்கையை பெரிதும் பாதிக்கிறது. இந்த முறை சுமார் ரெண்டு லட்சம் கனஅடி வரை தண்ணீர் ஆர்ப்பரித்து ஆற்றில் சென்று கடலில் கலந்தது. இதனால் திட்டு கிராமங்களிலிருந்து வெளியேற்றப்பட்ட மக்கள் அளக்குடி, ஆச்சாள்புரம், கொள்ளிடம், அனுமந்தபுரம் ஆகிய இடங்களில் அமைக்கப்பட்ட சிறப்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர்.

கடந்த 2004 மற்றும் 2018 -ம் ஆண்டுகளில் கொள்ளிடம் ஆற்றில் உபரிநீர் திறப்பால் வெள்ளப்பெருக் கு ஏற்பட்டது. அப்போதைய காலங்களில் அதிகபட்சம் மூன்று தினங்களுக்கு மேல் கிராமங்களில் வெள்ள நீர் சூழ்ந்தது இல்லை .ஆனால் இந்த முறை 20 நாட்களைக் கடந்தும் வெள்ளம் முழுமையாக வடியவில்லை . 20 நாட்களுக்குப் பின்னர் வெள்ளம் வடிந்தாலும் வெள்ளத்தின் பாதிப்பு சுவடுகள் கிராமங்கள் முழுவதும் உள்ளது. கிராமத்திற்கு செல்லும் சாலைகள் முற்றிலும் சேதமடைந்து,வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டுள்ளது.

மேலும் கிராமத்தில் உள்ள பெரும்பாலான குடிசை மற்றும் ஓட்டு வீடுகள் வெள்ளத்தால் சுவர்கள் இடிந்தும், மாடி வீடுகள் சேரும் சகதியுமாக உள்ளது. இதனால் மக்கள் குடியிருக்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். திட்டு கிராம மக்களின் வாழ்வாதாரத்திற்கு பெரிதும் உதவும் தோட்டப்பயிர்கள் ஆன மல்லி ,முல்லை, கத்திரி ,மரவள்ளி கிழங்கு, செடி முருங்கை ,பருத்தி உள்ளிட்ட 300 ஏக்கர் நிலப்பரப்பில் பயிரிடப்பட்ட தோட்டப்பயிர்கள் வெள்ளநீர் சூழ்ந்து அழுகி பெருத்த சேதத்தை ஏற்படுத்தி உள்ளது. இதனால் விவசாயிகள் பெரும் வேதனையில் இருந்து வருகின்றனர்.

அடிக்கடி வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு நாதல் படுகை கிராமம் தண்ணீர் சூழ்ந்து விடுவதால் இந்த கிராமம் படிப்படியாக கொள்ளிடம் ஆற்று நீரில் அடித்துச் செல்லப்பட்டு கொண்டிருக்கிறது. மேலும் நாதல்படுகை முதலை மேடு திட்டு ஆகிய கிராமங்களில் நிலப்பரப்பில் சுமார் 30 க்கும் மேற்பட்ட செங்கல் சூளைகள் அமைக்கப்பட்டு, இந்த கிராமப் பகுதியிலிருந்து மண் எடுத்து செங்கல் சூளை தொழில் நடைபெற்று வருகிறது. இதனால் நாதல்படுகை கிராமங்களில் பல இடங்கள் குளம் போல் தண்ணீர் தேங்கி உள்ளன.

மண்ணை பொக்லைன் எந்திரம் கொண்டு சுமார் 10 அடி ஆழத்திற்கு மண் எடுத்து செங்கல் சூளை அமைத்து வருவதால் நாதல்படுகை கிராமம் வருங்காலத்தில் ஆற்று நீரில் எளிதில் அடித்துச் செல்லப்படும் அபாய நிலை உருவாகியுள்ளது. கடந்த 20 ஆண்டுகளில் சுமார் 30 ஏக்கருக்கும் மேற்பட்ட நிலங்கள் கொள்ளிடம் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டு விட்டன. சுமார் 25க்கும் மேற்பட்ட வீட்டு குடியிருப்பு மனைகளும் கொள்ளிடம் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டு உள்ளது.

கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பு கொள்ளிடம் ஆற்றின் நடுப்பகுதியில் காசித்திட்டு என்ற கிராமம் இருந்துள்ளது. 1962 ஆம் ஆண்டு கொள்ளிடம் ஆற்றில் ஏற்பட்ட பெரும் வெள்ளப் பெருக்கால் காசி திட்டு என்ற கிராமமே காற்றாற்று வெள்ளத்தால் அடித்து செல்லப்பட்டது. தற்போது காசித்திட்டு கிராமம் இருந்ததற்கான எந்த தடயமும் இல்லை. வெள்ளப் பெருக்கின் போது அங்கிருந்து தப்பித்து வெளியேறியவர்கள் கொள்ளிடம் அருகே உள்ள சந்தபடுகை,நாதல் படுகை,முதலைமேடு மற்றும் கொள்ளிடம் ஆற்றின் இடது கரை ஓரம் அமைந்துள்ள வல்லம்படுகை, பெரம்பட்டு,குண்டலபாடி, கீழ குண்டலபாடி உள்ளிட்ட கிராமங்களில் இருந்து வருகின்றனர்.

காசிதிட்டு கிராமம் போல் நாதல்படுகை மற்றும் முதலைமேடு, திட்டு ஆகிய இரண்டு கிராமங்களும் தண்ணீரில் அடித்துச் செல்லப்படுமோ என்ற அச்சத்தில் அனைவரும் இருந்து வருகின்றனர். முதலைமேடுதிட்டு, நாதல்படுகை மற்றும் வெள்ளை மணல் ஆகிய கிராமங்களில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் வசித்து வருகின்றனர். எனவே மேற்கண்ட கிராமங்களை சேர்ந்தவர்களுக்கும், கொள்ளிடம் ஆற்றின் கரையை ஒட்டி வாழ்ந்து கொண்டிருக்கின்ற குடும்பத்தினருக்கும், உடனடியாக கொள்ளிடம் ஆற்றின் கரை பகுதிக்கு வெளியில் மாற்று குடியிருப்புக்கு அரசு இலவச வீட்டு மனை பட்டா கரையின் மறு பகுதியில் வழங்கி வீடு கட்டி தர வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

இதுவே வரும் காலங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டாலும் மக்கள் பாதிக்காத வகையில் இருக்க நிரந்தர தீர்வாக இருக்கும். தற்போது சேதம் ஏற்பட்டுள்ள வீடுகளை முழுமையாக கணக்கிட்டு நிவாரணஉதவிகள் வழங்கிடவும்,பயிர் சேதங்களையும் அதிகாரிகள் ஆய்வு செய்து இழப்பீடு வழங்கிடவும் பாதிக்கப்பட்ட மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %