0 0
Read Time:4 Minute, 15 Second

தமிழ்நாட்டில் மின் கட்டண உயர்வை உடனடியாக திரும்பப் பெற வலியுறுத்தி, அதிமுக சார்பில் மாவட்ட தலைநகரங்களில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் 16ம் தேதி நடைபெறும் என்று அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
விடியும், விடியும் என்று சொல்லி மக்களை இருளில் மூழ்கடிக்கக் கூடிய செயல்களை மட்டுமே தொடர்ந்து செய்து வருகிறது திமுக அரசு. எதிர்க்கட்சி வரிசையில் திமுக அமர்ந்திருந்தபோது, 10 ஆண்டுகளாக எதைச் சொல்லியும் மக்களை திசைதிருப்ப முடியவில்லை என்ற எண்ணத்தை உள்வாங்கி, பொய்யைச் சொல்லி மக்களை திசை திருப்பலாம் என்று எண்ணி, திமுக பல பொய்யான தேர்தல் வாக்குறுதிகளை மக்களுக்கு அளித்து, புறவாசல் வழியாக ஆட்சிக் கட்டிலில் அமர்ந்திருக்கிறது.

மின் கட்டணத்தையோ, பேருந்து கட்டணத்தையோ, பால் விலையையோ உயர்த்தமாட்டோம் என்ற சொல்லி ஆட்சியில் அமர்ந்தவர்கள், வாக்குறுதிகளை காற்றில் எழுதியதாக, உண்மைகளை தண்ணீரில் எழுதியதாகக் கருதி, தற்போது மின் கட்டணத்தை உயர்த்தி, ஏற்கனவே மிகப் பெரிய துன்பத்தில் உழன்று கொண்டிருக்கும் தமிழக மக்களை, அவர்களுடைய தலையில் ஆயிரம் செந்தேள்கள் கொட்டியதைப் போல, கடுமையான துயரத்தையும், வலியையும் ஏற்படுத்துகின்ற விதமாக, ஒவ்வொரு ஆண்டும் மின் கட்டணத்தை உயர்த்தும் என்பதையும் சொல்லி, மின் கட்டணத்தை உயர்த்தி அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார்கள். இந்த உயர்வு இம்மாதத்தில் இருந்தே அமலுக்கு வரும் என்ற அதிர்ச்சிகரமான செய்தியையும் சொல்லி இருக்கிறார்கள்.

மக்களை வாட்டி வதைக்கும் திமுக அரசைக் கண்டித்து, அதிமுக சார்பில் நடைபெறவுள்ள கண்டன ஆர்ப்பாட்டங்களில் பொதுமக்கள் அனைவரும் பெருந்திரளான அளவில் கலந்துகொண்டு ஆதரவு நல்கிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். வருகிற 16ம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ள, பேரறிஞர் அண்ணாவின் 114வது பிறந்த நாள் விழா பொதுக் கூட்டங்கள் 22ம் தேதி வியாழக்கிழமை நடைபெறும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று அந்த அறிக்கையில் எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே, எடப்பாடி பழனிசாமி டுவிட்டரில் வெளியிட்ட பதிவுகளில், “ஏழை-எளிய நடுத்தர மக்களின் நாளங்களை அறுத்து அவர்களின் ரத்தத்தை உறிஞ்சும் மின்கட்டண உயர்வு கண்டனத்திற்குரியது.

மக்களை வஞ்சித்து அவர்கள் தலையில் மின்னல் இடியாய் விழுந்திருக்கும் அளவு உயர்ந்திருப்பது மின் கட்டணமா? தங்களின் நிர்வாக திறமையின்மை கட்டணமா?
இந்த அரசு மக்களின் மீது ஏற்றியுள்ள பெருஞ்சுமையான மின் கட்டண உயர்வை உடனடியாக திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்துகிறேன்” என்றும் எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %