நடிகர் சோனு சூட்டின், சூட் அறக்கட்டளை மற்றும் டிவைன் இந்தியா யூத் அசோசியேஷன் இரண்டும் இணைந்து 2022-23 ஆம் ஆண்டிற்கான ‘சம்பவம்’ உதவித் தொகை திட்டத்தை அறிவித்துள்ளனர்.
பாலிவுட் நடிகரான சோனு சூட் கொரோனா காலத்தில் மக்களுக்கு தொடர்ச்சியாக பல்வேறு உதவிகளை செய்தார். அதனைத் தொடர்ந்து அவரது அறக்கட்டளையின் கீழ் ஏழ்மையான குடும்பங்களுக்கும், மாணவர்களுக்கும் தொடர்ந்து உதவிகளைச் செய்து வருகிறார். இந்நிலையில், கடந்த ஆண்டு ஐஏஎஸ் தேர்வுகளுக்கான இலவச ஆன்லைன் பயிற்சி திட்டத்தில் பல மாணவர்கள் வெற்றி பெற்றனர். இந்த வெற்றிக்கு பிறகு, நடிகர் சோனு சூட்டின், சூட் அறக்கட்டளை மற்றும் டிவைன் இந்தியா யூத் அசோசியேஷன் (DIYA) ஆகிய இரண்டும் இணைந்து 2022-23 ஆம் ஆண்டிற்கான ‘சம்பவ்’ உதவித் தொகை திட்டத்தைத் தொடங்கியுள்ளது.
சம்பவ் என்னும் இந்த ஊக்கத்தொகை திட்டம் சிவில் சர்வீஸ் தேர்வுகளுக்கு பயிற்சி பெறுபவர்களுக்கானத் திட்டம். இந்த திட்டத்தின் கீழ் குறிப்பிட்ட மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு, இந்தியாவில் உள்ள டாப் ஐஏஎஸ் பயிற்சி மையங்களில் அவர்களுக்கு பயிற்சி வழங்கப்படும். இந்த சம்பவ் ஊக்கத்தொகை திட்டம்,2021 ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. சூட் அறக்கட்டளை மற்றும் டிவைன் இந்திய யூத் அசோசியேஷன் ஆகிய இரண்டும் இணைந்து இந்த திட்டத்தை நடத்தி வருகிறனர்.
இதன் மூலம் ஏழ்மையான பின்புலத்தைக் கொண்ட மாணவர்களும், ஐஏஎஸ் போன்ற நுழைவுத் தேர்வுகளில் பங்கேற்க இந்த திட்டம் வழி வகுக்கிறது. இது குறித்து DIYA நிறுவனத்தின் மணிஷ் குமார் சிங் பேசுகையில், நாங்கள் சோனு சூட்டுடன் இணைந்து சம்பவ் ஊக்கத்தொகை திட்டத்தில் இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த திட்டத்தின் மூலம் ஐஏஎஸ் ஆக வேண்டுமென நினைப்பவர்கள், தங்களது குடும்ப சூழ்நிலைகளை கருத்தில் கொண்டு பின்வாங்க தேவையில்லை. அதோடு ஏழை எளிய மாணவர்கள் இதன் மூலம் பயிற்சி பெற்று தேர்வுகளில் வெற்றி பெற இது ஒரு நல்ல வாய்ப்பாக அமையும் என்றும் கூறினார்.
மேலும் இந்த திட்டம் குறித்து நடிகர் சோனு சூட் பேசுகையில், தங்கள் குடும்ப சூழ்நிலைகளை பொருட்படுத்தாமல் ஐஏஎஸ் ஆக விரும்புகிறவர்கள் அனைவருக்கும் சம வாய்ப்புகள் கிடைக்கப் பெறுவது தான் இந்த திட்டத்தின் நோக்கம். ‘அறிவே ஆற்றல்’, என்று நடிகர் சோனு சூட் கூறியுள்ளார்.