அரசு பள்ளி கட்டிடத்தின் மேற்கூரை பெயர்ந்து விழுந்து 3 மாணவிகள் உள்பட 4 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இதையடுத்து, பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டு அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே உள்ள வி.மாமாந்தூர் கிராமத்தில்
ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி உள்ளது. இங்கு 270-க்கும் மேற்பட்ட மாணவர்கள்
படித்து வருகின்றனர். இங்கு போதிய இடவசதி இல்லாததால் பழுதடைந்த கட்டிடத்தில்
வகுப்புகள் நடைபெற்று வந்தன. நேற்று மதியம் 6-ம் வகுப்பு மாணவர்கள்
வகுப்பறையில் படித்துக் கொண்டிருந்தபோது கட்டிடத்தின் மேற்கூரையில் இருந்து
சிமெண்டு காரைகள் திடீரென பெயர்ந்து விழுந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த
மாணவர்கள் அலறியடித்துக்கொண்டு வகுப்பறையில் இருந்து ஓட்டம் பிடித்தனர்.
சிமெண்ட் காரை பெயர்ந்து விழுந்ததில் அதே ஊரைச் சேர்ந்த 4 பேருக்கு தலையில்
படுகாயம் ஏற்பட்டது. உடனே அவர்களை சக மாணவர்களும், ஆசிரியர்களும் சிகிச்சைக்காக நயினார்பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர். இதில், முதல் உதவி சிகிச்சைக்குப் பின்னர் மாணவர் பரத் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவத்தை அறிந்து பள்ளிக்கு விரைந்த பெற்றோர்கள், பொதுமக்கள் அவரவர் பிள்ளைகளை அழைத்துச் சென்றனர்.
இன்று பள்ளிக்கு மாணவர்களை பெற்றோர்கள் அனுப்பாமல் இருந்த நிலையில், பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. மேலும் மாவட்ட திட்ட அலுவலர் உட்பட பள்ளி கல்வி துறை அதிகாரிகள் நேரில் வந்து சிமெண்ட் காரை பெயர்ந்து விழுந்த வகுப்பறையை பார்வையிட்டு ஆசிரியர்களிடம் விசாரித்தனர்.