தரங்கம்பாடி, செப்-16:
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி கல்வி மாவட்டம் செம்பனார்கோவில் வட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா மிதி வண்டிகளை பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா எம்.முருகன் வழங்கினார்.
செம்பனார்கோவில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் சம்பந்தம் மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் நிகழ்ச்சி சம்பந்தம் மேல்நிலை பள்ளியில் நடைபெற்றது. பள்ளியின் ஆலோசகர் ஆர்.பாண்டியன் தலைமை வகித்தார். செம்பனார்கோவில் ஒன்றிய பெருந்தலைவர் நந்தினி ஸ்ரீதர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மஞ்சுளா, விஜயலட்சுமி, மாவட்ட கவுன்சிலர் வெண்ணிலா தென்னரசு சம்பந்தம் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் செல்வம், செம்பனார் கோயில் பெண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ரமா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில் பூம்புகார் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், நாகை வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளருமான நிவேதா எம் முருகன் கலந்து கொண்டு 464 மாணவ மாணவிகளுக்கு மிதிவண்டிகள் வழங்கி பேசினார். மாணவர்கள் எதிர்காலத்தில் உயர்ந்த நிலையை அடைய தன்னம்பிக்கையுடன் கல்வியை பயில வேண்டும், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கல்விக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்துள்ளார். கிராமப்புற மாணவர்கள் நகர்ப்புற மாணவருக்கு இணையாக கல்வி பயில பல்வேறு சிறப்பு திட்டங்கள் அறிவித்து நமது முதல்வர் செயல்படுத்தி வருகிறார். மேலும் மாணவர்கள் ஆசிரியர்களிடம் நன் மதிப்பு பெறவேண்டும். இதை மாணவர்கள் பயன்படுத்தி கொண்டு கல்வியில் சிறந்து விளங்க வேண்டும் என்று பேசினார்.
இதேபோல் திருக்களாச்சேரி ஹமீதியா மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு பள்ளி செயலாளர் என்.ராஜ் தலைமை வகித்தார். மாவட்ட கவுன்சிலர் ராபியா நர்கிஸ் பானு அப்துல் மாலிக், ஊராட்சி மன்ற தலைவர் சம்சாத் ரபீக் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமையாசிரியர் பாண்டியன் வரவேற்றார். இதில் 86 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதி வண்டிகளை எம்எல்ஏ நிவேதா எம்.முருகன் வழங்கி பேசினார்.
அதைத்தொடர்ந்து தரங்கம்பாடி தெரசா பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு பள்ளி தாளாளர் மெர்சி தங்கம் தலைமை வகித்தார். பேரூராட்சி மன்ற தலைவர் சுகுணா சங்கரி, துணைத் தலைவர் பொன். ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வைத்தனர். தலைமை ஆசிரியர் செவிலி வரவேற்றுப் பேசினார். இதில் 313 மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகளை எம் எல் ஏ நிவேதா எம்.முருகன் வழங்கி பேசினார்.
நடைபெற்ற நிகழ்ச்சிகளில் திமுக ஒன்றிய செயலாளர்கள் அப்துல் மாலிக், அன்பழகன், மாவட்டத் துணைச் செயலாளர் ஞானவேலன், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதர், ஒன்றிய குழு துணைத் தலைவர் பாஸ்கர், தரங்கைப் பேரூர் திமுக கழக செயலாளர் முத்துராஜா மற்றும் ஊராட்சி மன்ற தலைவர்கள் ஒன்றிய குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
மாவட்ட செய்தியாளர்: இரா.யோகுதாஸ்