தமிழகத்தில் இன்று ஒரே நாளில் மட்டும் 47 பேர் ”ஃபுளூ” காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
மருந்து தட்டுப்பாடு உள்ளதாக பல்வேறு புகார்கள் எழுந்த நிலையில் சென்னை எழும்பூரில் உள்ள தமிழ்நாடு மருத்துவ பணிகள் கழகத்தில், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆலோசனை மேற்கொண்டார். பின்பு செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தமிழகத்தில் கடந்த சில நாட்களாக மருத்துவமனையில் மருந்துகள் தட்டுப்பாடு தொடர்பாக செய்தி வெளியாகிறது. இது தவறான செய்தி என்று தெரிவித்தாலும் கூட மீண்டும் இது போன்ற செய்தி வருவதாகவும், புகார் வந்ததால், வாரங்களில் 5 அல்லது 6 மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டு வருகிறோம்.
மருத்துவமனையில் உள்ள மருந்து கிடங்கைத்தான் முதலில் ஆய்வு மேற்கொள்கிறோம். எந்த மருத்துவமனையிலும் மருந்து தட்டுப்பாடு என்கிற அவலம் இல்லை என்று தெரிவித்தார்.தொடர்ந்து பேசிய அவர், தமிழகத்திற்கு தேவையான அத்தியாவசியமான 327 மருந்துகள் கொள்முதல் செய்யப்பட்டு, மூன்று மாதங்களுக்கு தேவையான மருந்துகள் கையிருப்பில் உள்ளன. இதற்கு முன்பு வரையிலும் 32 இடத்தில் மட்டும் தான் மருந்து கிடங்கு என்பது இருந்தது, தற்போது நான்கு மருத்துவ கிடங்குகள் புதிதாக அமைக்கப்பட்டுள்ளது.
மேலும், Iv fluids மருந்து சில இடங்களில் தட்டுப்பாடு இருந்தது உண்மை தான் இதற்கு காரணம் உக்ரைன் போரால் இறக்குமதி செய்வதற்கு காலதாமதமானதால் தட்டுப்பாடு இருந்தது. பருவமழைக்கு முன்னால் வரும் காய்ச்சல் பாதிப்பு, குழந்தைகளுக்கு வரக்கூடியதுதான், கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பாதிப்பு இருந்ததால் காய்ச்சல் பாதிப்பு பெரிதாக தெரியவில்லை ஆனால் எப்போதும் ஏற்படக்கூடிய பாதிப்பு தான் தற்பொழுதும்ஏற்பட்டு இருக்கிறது என்றார்.
இன்று ஒரே நாளில் மட்டும் 47 பேர் influenza காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, மொத்தமாக தமிழகத்தில் 965 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 10 பேர் உயிரிழந்துள்ளதாக கூறினார். குழந்தைகளுக்கு காய்ச்சல் போன்ற அறிகுறிகள் இருந்தால் பெற்றோர்கள் பள்ளிகளுக்கு அனுப்பக்கூடாது. அதேபோல பள்ளிகளில் ஆசிரியர்கள் குழந்தைகளுக்கு காய்ச்சல் இருப்பது தெரியவந்தால் வீடுகளுக்கு திருப்பி அனுப்பி வைக்க வேண்டும். மேலும், தமிழகத்தில் காய்ச்சல் பாதிப்பு பெரிய அளவில் இல்லை அதனால் பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பதற்கான அவசியம் இல்லை எனவும் கூறினார்