தனது மகனின் சிகிச்சையில் கவனம் செலுத்தி வருவதால் அரசியல் பாதைக்குள் இனி வரமாட்டேன் என நடிகர் நெப்போலியன் அறிவித்துள்ளார்.
செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில்
நடைபெற்ற நிகழ்ச்சியில், நடிகரும் முன்னாள் மத்திய அமைச்சருமான நெப்போலியன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், தான் நடிகர் சங்கத்தில் உறுப்பினராக இருந்த போதும், சட்டமன்ற உறுப்பினராக
இருந்த போதும், மத்திய அமைச்சராக இருந்தபோதும் தொடர்ந்து இளைஞர்கள் வேலை வாய்ப்பு கேட்டுக்கொண்டிருந்தனர் என்றார்.
இளைஞர்களின் வேலை வாய்ப்பு வழங்கும் அடிப்படையில் ஜீவன் டெக்னாலஜிஸ் நிறுவனம் சிறப்பாக பணியாற்றுவதாகவும், படிப்படியாக உயர்ந்து இன்று ஆயிரம்
நபர்களுக்கு மேல் பணியாற்றும் அளவிற்கு வளர்ந்துள்ளது என்றும் கூறினார்.
குழந்தையின் உடல் நலக்குறைவால் சினிமா தொழிலில் அதிக கவனம் செலுத்த
முடியவில்லை என தெரிவித்த அவர், அரசியலில் இருந்து விலகி ஏழு ஆண்டுகள் கழிந்துவிட்டதாக கூறினார்.
இனி அரசியலுக்கு வரமாட்டேன் என்றும் நெப்போலியன் அறிவித்தார். தான் விவசாய குடும்பத்தை சார்ந்துள்ளதால் அடிப்படையில் விவசாயம் செய்ய வேண்டும் என்ற எண்ணம் எனக்குள் இருந்ததாக தெரிவித்தார். அதற்காக கடந்த ஆண்டு 300 ஏக்கரில் நிலம் வாங்கி விவசாயம் செய்துள்ளதாகவும், நான்கு மாதங்களில் காய்கறிகள் அனைத்தும் நிலத்திலிருந்து நானே பறித்து உபயோகப்படுத்தினேன் என்றும் கூறினார். தான் சாகும்வரை, அரசியலுக்கு குரு கருணாநிதியும், சினிமாவுக்கு குரு பாரதிராஜா என்றும் நெகிழ்ந்த அவர், இதில் எந்த மாற்றமும் இல்லை என தெரிவித்தார்.